இந்தியாவில் ஆண்டுதோறும் 30 முதல் 40 லட்சம் பேர் பாம்பு கடிக்கு உள்ளாகின்றனர். இதில் 50,000 முதல் 60 பேர் உயிரிழக்கின்றனர். பாம்பு கடி உயிருக்கு ஆபத்தாக மாறாமல் இருக்க, செயல்படும் நேரம் மிக முக்கியம். பாம்பு கடித்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுக வேண்டும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரையிலான பாம்பு கடி எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் பன்மடங்கு உயாந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இக்காலகட்டத்தில் வெப்பம் தாங்காமல் பாம்புகள் வெளிவருவதாக கூறும் நிபுணர்கள் இதற்கு காலநிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவற்றில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. பாம்பு இனங்கள் அதிகம் காணப்படும் மாநிலம் கேரளா.
இந்திய நாகம் (Naja naja), எண்ணெய் விரியன் எனப்படும் கட்டு விரியன்(Bungarus caeruleus), சுருட்டைப் பாம்பு (Echis carinatus), கண்ணாடி விரியன் (Daboia russelii) ஆகியவை இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான நான்கு வகை நச்சுப்பாம்புகள்,

இவற்றுள் இந்திய நாகம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது. . இந்தியாவில் பெரும்பாலான பாம்புக்கடி இறப்புக்களுக்கு இதுவே காரணமாக விளங்குகிறது. சுருட்டைவிரியன் அளவில் சிறியதாயினும், இதன் நஞ்சு சிவப்பணுக்களை அழிக்கும் வீரியம் வாய்ந்தது; கண்ணாடி விரியன் நச்சும் குருதி அணுக்களையே அழிப்பது.
இராஜ நாகம் தென்கிழக்கு ஆசியபகுதிகளில் வசிக்கும் சிறப்பினம். உலகில் உள்ள நச்சுப்பாம்புகளில் இதுவே மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் மனித இறப்பு வீதம் 75% வரை இருக்கிறது.
பச்சை விரியன் இலங்கையில் காணப்படும் விரியன் இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. ஆண் பாம்புகள் 70 செ.மீ நீளம் வரையும் பெண் பாம்பு 130 செ.மீ வரையும் வளரக்கூடியவை. இலங்கையில் பரவலாக எல்லா இடங்களிலும் இவை காணப்படுகின்றன. தரை மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
நாட்டில் பாம்புகளே இல்லாத மாநிலம் உள்ளது – அது லட்சத்தீவு. இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லையாம். லட்சத்தீவு நிர்வாகம், தங்கள் தீவை பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதனால், லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.
நியூசிலாந்து தன்னை பாம்புகள் இல்லாத நாடாக அறிவித்து, அவற்றை கண்காட்சிக்காக உயிரியல் பூங்காக்களில் கூட வைத்திருக்கவில்லை. பாம்புகளை செல்லப் பிராணியாகவோ அல்லது கடல் வழியாகவோ கொண்டுவருவது நாட்டுச் சட்டங்களின்படி கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு இந்தியாவில் பாம்பு கடித்தது பற்றிய விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 43% பாம்பு கடி கண்ணாடி விரியனினாலும், 18% பாம்புக்கடி விரியன் பாம்புகளினாலும், 12% பாம்புக்கடி நாகப்பாம்புகளாலும் ஏற்பட்டுள்ளது. சுமார் 21% பாம்புக்கடியில் பாம்புகளை அடையாளம் காணமுடியவில்லை.
உலகில் 3600 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில், கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லும் பாம்பினம். மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் ஊரவல்லது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும். சுமார் 10 மில்லி கிராம் நஞ்சுக்கே மக்கள் இறந்துவிடுவார்கள் எனும்போது மாம்பா பாம்பினங்களின் மாபியா என்பது உறுதியாகிறதல்லவா?
பாம்பு நஞ்சு உடலில் உள்ள தசைகளை தாக்குவதாலேயே உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடுகிறது.

பாம்பு வழிபாடு உலகம் முழுவதும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா, எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.
மக்கள் சில வகை பாம்புகளை தங்களது வளர்ப்பு பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரம் மாநிலத்தில் சோலப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பூர் என்னும் கிராமத்தில் பாம்புகளை தங்கள் வீட்டிலேயே வளர்க்கின்றனர். 200 கிமீ பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாக அங்கங்கு இருந்தாலும் மக்கள் அதைக் கண்டு அஞ்சுவதில்லை. இந்த கிராமத்தில் பாம்புகளை தங்களது குடும்பத்தின் உறுப்பினர் போலவே வளர்த்து வருகின்றனர்.
அதே சமயம் வடமாநிலங்களில் போதிய கல்வி அறிவு இன்மையாலும் மூடநம்பிக்கையாலும் பாம்புகள் கடித்தாலும் மந்திரவாதிகளிடம் போய் பல உயிர்கள் பறிபோயுள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த நபரை மாட்டு சாணத்தால் மூடி வைத்துள்ளனர். இதனால் பாம்பு கடிபட்ட நபர் உயிரிழந்துள்ளார். பாம்பு விஷத்தினால் அவர் இறக்கவில்லை. மாட்டு சாணத்தால் ஏற்பட்ட மூடிவைத்தால் அவர் உயிரிழந்துவிட்டதாக பிரதேச பரிசோதனையில் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளில் வியட்நாம், சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் பாம்பை உணவாக உட்கொள்கின்றனர். இதனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை அவர்கள் பெரிதாக எடுத்துக் எடுத்துக்கொள்வதில்லை.
எதுவாக இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
கட்டுரை: பாண்டிசெல்வி, சென்னை.