தமிழ்நாட்டில் மணல், தாதுமணல், கற்கள், கிரானைட் உள்ளிட்ட கனிம கொள்ளை கடந்த இரு பத்தாண்டுகளாக தொடர்ந்து நடந்துவருகிறது. அதற்கு முன்பு மணல் கொள்ளையர்கள் என்ற தனி ரகத்தினர் மட்டுமே அதை செய்துவந்தனர். அரசியல் கட்சியினருக்கு மாமூல் மட்டும் சென்றது. மணல் திருட்டு கரன்சி மணத்தில் மனதை பறிகொடுத்த அரசியல்வாதிகள், தாங்களே நேரடியாக மணல் கொள்ளையில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
தற்போது நடக்கும் ஆட்சியில் உச்ச பொறுப்பில் இருப்போரின் குடும்பத்தினரே மணல் கொள்ளையை குடும்ப தொழிலாக செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஆற்று மணலுக்கு தடை விதித்த உடன், சவுடு மண் எடுப்பது என்ற பெயரில் மணல் கொள்ளைக்கு சட்டரீதியாக ஏலமே விடப்பட்டது. அதற்கு நீதிமன்ற தடை உத்தரவு இருப்பதால், புத்திசாலித்தனமாக புதிய மண் வகையை கண்டுபிடித்து கொள்ளையை தொடர அரசும் ஆட்சியர்களும் வழி வகுத்துள்ளனர்.
அதாவது ‘உபரி மண்’ என்ற பெயரில் நிலங்களில் உள்ள மண்ணை, மணலை தோண்டியெடுத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ‘இந்த விதமாக, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் கீழ்நாட்டுக் குறிச்சி, தாப்பாத்தி, விளாத்திகுளம் பல்லாக்குளம், ஏரல் பொட்டல், முக்காணி திருவைகுண்டம் தோழப்பன் பண்ணை, கலியாவூரில் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினந்தோறும் மணல் அள்ளி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வருவாய், காவல் துறையினர் மணல் லாரிகளை நிறுத்தி சோதனை செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்தின் வழியாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை கிளப்பும் சமூக ஆர்வலர்கள் மிரட்டப்படுகின்றனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்தும் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை என மாநில நில மற்றும் நீர்வள ஆதார விபர குறிப்பு மையம் தெரிவித்துள்ளது’ என விவசாயிகள் மக்கள் முன்னணி தலைவர் காந்திமதிநாதன் கூறுகிறார்.










