ஒரு காலத்தில் தியேட்டரே மக்களின் உச்சபட்ச பொழுதுபோக்கு தலமாக இருந்தது. இப்போதும் பொதுவெளியில் ஒரு கலைப்படைப்பை கொண்டாட அதுவே ஏற்றதாக இருக்கிறது. அப்படிப்பட்ட தியேட்டருக்கு ஏற்கனவே சிக்கல் வந்தது. இப்போது அது முற்றி நெருக்கடியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் வேகம் பல மடங்கு அதிகரித்ததால் கடந்த 26ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. அதனால் தயாராக இருந்த புதிய படங்கள் வெளியீடு பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஓராண்டாக கொரோனாவின் பெயரால் திரைப்படத் தயாரிப்பு முதல் வெளியீடு வரை அனைத்து வேலைகளும் கெட்டன.
இப்போது மேலும் நெருக்கடி ஏற்படவே, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக ஓடிடியிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ , விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’, திரிஷா நடித்துள்ள ‘ராங்கி’ படங்களையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ ஓடிடி தளத்தில் ஜூன் 18ல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொன்மகள் வந்தாள், பென்குயின், நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கபெ ரணசிங்கம், சூரரைப்போற்று போன்ற படங்கள் ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி இயங்குதளத்துக்கு விற்கப்பட்டதன் மூலம் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் இடையில் பிரச்சனையே எழுந்தது.
ஓடிடி தளத்துக்கு 2018ல் வருமானம் 1370 கோடி, 2019ல் 1910 கோடி, 2020ல் 7220 கோடி என தொடர்ந்து உயர்ந்துகொண்டேயிருப்பதால், விரும்பி புதிய படங்களை வாங்குகின்றனர். விநியோகஸ்தர்களை மீறி, ஒடிடி நிறுவனங்களை தேடி தயாரிப்பாளர்கள் செல்கின்றனர்.
கடந்த ஓராண்டில் ஓடிடி தளம் 85{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} வளர்ச்சி கண்டது. நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒரு கோடிக்கு அதிகமான பயனாளரை பெற்றது. அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் டிஸ்னி பிளஸ், ஜி 5 தளங்களும் 2020 முதல் இப்போது வரை அதிகம் பார்க்கப்படுகின்றன.
கொரோனா பீதியால் படங்கள் ஓடிடி இயங்கு தளங்களில் வெளியாக ஆரம்பித்துள்ளன. ரசிகர்களும் ஓடிடியில் பார்க்க பழகிக்கொண்டனர். இதனால் தியேட்டருக்கு சென்று திரும்பும், காத்திருக்கும் நேர சேதாரம் குறைகிறது என்று நம்புகின்றனர்.
ஓடிடி தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து மாறுபட்டு சுதந்திரமான பார்வையை தருகிறது. ஒரே வீட்டில் ஓடிடி இயங்கு தளங்கள் மூலம், ஒருவர் டிவியில் படம் பார்க்கலாம், இன்னொருவர் மொபைல் போனில், மற்றொருவர் லேப்டாப்பில் படம் பார்க்கலாம்.
ஓடிடி தளத்தால் திரையரங்குக்கு பேரிழப்பு வந்துவிடுமா?
ஏற்கனவே இரு கட்டமாக தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கூடுதல் காட்சிகள் காண்பிக்க அனுமதிக்கப்பட்டாலும், நேர சூழலால் அது பெரிதாக வசூலை ஈட்டிக்கொடுக்கவில்லை.
இதற்கு முன்னரும் திரைப்படங்கள் கேசட் வடிவில் விற்கப்பட்டன. டிவி வந்தபோதும் திகைப்பு ஏற்பட்டது. அடுத்து கேபிள் டிவியில் படங்கள் போடப்பட்டன. இதனால் தியேட்டர்க்காரர்கள் பிழைப்பில் மண் விழும் என்றார்கள். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. ஆனாலும், பெண்கள், முதியவர்கள் வருகை சற்று குறைந்தது.
அரசு தரப்பில் வரும் ஆதரவும் தியேட்டரின் வளர்ச்சி, தாழ்ச்சிக்கு காரணமாகிறது. ஏற்கனவே 2017ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டது. இதனால் சினிமா டிக்கெட் விலை அதிகமாகியது. இதையடுத்து சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்தது. வரியை குறைக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் ஓரளவு சமாதானம் ஆனது.
அதேபோல், டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்சனையாலும் சிக்கல் வந்தது. ’சினிமா டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்’ என்று அப்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இவ்வாறாக , தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பல வகைகளில் முயன்றாலும், தியேட்டர் கூட்டம் குறைந்து வருவதையும், இளவயது ரசிகர்களே பெரிதும் அவற்றை நாடுவதால் படம் ஓடும் நாட்கள் குறைவதையும், அதன் மூலம் நட்டம் ஏற்படுவதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
1956ல் தனது மூத்த மகள் பெயரில் சாந்தி தியேட்டரை சிவாஜி கணேசன் கட்டினார். 2015 வரை இந்த தியேட்டரில் படங்கள் ரிலீசாகின. மார்ச் மாதம் பிரபல கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து சாந்தி தியேட்டரை இடித்து, திரையரங்க காம்ப்ளெக்ஸ் கட்டுவதாக சிவாஜி குடும்பத்தினர் கூறினார்கள். ஆனால் தற்போது முற்றிலும் வணிக மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஒரே ஒரு இடம் மட்டும் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்ரை கூறும் மண்டபமாக அமைந்திருக்கிறது.
கலைத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் குடும்பத்தினர் கூட தியேட்டரால் இனி லாபம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.
தென்னிந்தியாவின் சினிமா தலைமையகமான சென்னையில்தான் தென்மாநில மொழித்திரைப்படங்கள் உட்பட இந்தி திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. அதனால் இங்கு தியேட்டர்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
கடந்த காலங்களில் ஸ்டுடியோக்கள் பல மூடப்பட்டன. தொடர்ந்து பல பழைய தியேட்டர்கள் மூடப்பட்டன. அதுவும் கொரானோ ஊரடங்கு ஆரம்பமான சில வாரங்களுக்குள்ளேயே சென்னையின் பழைமையான தியேட்டர்களான வட பழனியில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி, வண்ணாரப்பேட்டையில் உள்ள மகாராணி ஆகிய தியேட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் தண்டையார்பேட்டையில் உள்ள மற்றொரு பழமையான தியேட்டரான அகஸ்தியா தியேட்டரும் மூடப்பட்டது.
இதில், அகஸ்தியா , சிறப்பாக பராமரிக்கப்படும் தியேட்டர்களுக்கான விருதை வென்றது. கடந்த மூன்று வருடங்களாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாகவும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் சூழ்நிலையாலும் நிரந்திரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் டவுன் பகுதியில் கடந்த நூற்றாண்டில் தொடங்கப்பட்ட பிராட்வே, பிரபாத், தங்கம், செலக்ட் போன்ற பல திரையரங்குகள் கடந்த சில ஆண்டுகளில் இடிக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் ரஹேஜா டவராக மாறிவிட்ட எல்பின்ஸ்டோன், பின்னாளில் அலங்காராக அறியப்பட்டு இப்போது கமர்ஷியல் வளாகமாகிவிட்ட குளோப், பிளாஸா, பாரகன், கெயிட்டி, சன், சித்ரா, சயானி, கிரவுன், மினர்வா, முருகன், மேகலா, ஆனந்த், மினி ஆனந்த், சபையர், எமரால்ட், ப்ளூ டடமன்ட் காமதேனு, உமா, ராம், புவனேஸ்வரி, வசந்தி, ராக்ஸி, சரஸ்வதி, பத்மநாபா என மூடப்ப்பட்ட தியேட்டர்கள் அதிகம். பாரத் திரையரங்கு சற்று நவீனமாக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் முன்பாக கட்டப்பட்ட திரையரங்கு எலெக்ட்ரிக் தியேட்டர் இப்போது பழைய போஸ்ட் ஆபிசாக இருக்கிறது.
தென் ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டரான மதுரை தங்கம் பல பிரச்சனைகளால் மூடிக்கிடக்கிறது. அதேபோல அதிக இருக்கைகள் கொண்ட திருச்சி கலைவாணியும் மூடப்பட்டுள்ளது.
மதுரையில் 1930ல் கட்டப்பட்ட சிடி சினிமா திரையரங்கில் ‘சிந்தாமணி’ என்ற திரைப்படம் மூன்று வருடங்கள் ஓடி சாதனை படைத்தது. அதில் வந்த வருமானத்தில் கட்டப்பட்ட ‘சிந்தாமணி’ திரையரங்கம் இப்போது பிரபல நிறுவனம் ஒன்றின் துணிக்கடையாகியுள்ளது.
நடனா தியேட்டர் இப்போது பார்க்கிங் இடமாகியுள்ளது. மீனாட்சி, மீனாட்சி பாரடைஸ் வழக்கு மூலம் இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
நெல்லையில் அசோக், கலைவாணி, லட்சுமி, பாலஸ் டி வேல்ஸ், சிவசக்தி, செல்வம், நியூ ராயல், பார்வதி ஆகிய திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
தியேட்டர்கள் வீழ்ச்சிக்கு சென்னை கெயிட்டி தியேட்டர் வரலாறு சிறு எடுத்துக்காட்டு.
தென்னிந்தியாவில் சினிமா தியேட்டர் கட்டிய முதல் இந்தியரான வெங்கையாவால் 1914ல் கட்டப்பட்ட து கெயிட்டி.
சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்த இத்தியேட்டர், மவுனப்படங்கள் காலத்திலேயே சிறப்பாக இயங்கியது. எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1983ல் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டது. ஆனாலும், 2000த்துக்கு பின் கெயிட்டி வீழ்ச்சி கண்டது. நூறு நாள் விழாப்படங்கள் பல கண்ட தியேட்டர், தனது நூறு ஆண்டு விழாவை காணாமல் 2005ல் ஆம் ஆண்டு முதல் பணியை முடித்துக்கொண்டது.
ஓடிடி போன்றவை அல்ல, தொழில்நுட்பக் குறைபாடும் தியேட்டர் மூடப்படக் காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு சில திரையரங்குகளைத் தவிர, பிற திரையரங்குகள் எல்லாம் க்யூப் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டதால் தற்போது வெளியாகும் எந்தத் திரைப்படமும் ஃபிலிமின் பிரிண்ட் செய்யப்படுவதில்லை. ஆகவே இந்தத் திரையரங்கில் புதிய திரைப்படங்களைத் திரையிட முடியாது.
சென்னையில் பாட்சா போன்ற ஓரிரு தியேட்டர்கள் ஃபிலிம் பிரிண்ட் போட்ட சுமார் இருநூறு படங்களை திரும்பத் திரும்ப ரசிகர்களுக்கு காட்டி வருகின்றன.
தொழில்நுட்பக் குறைபாட்டை சரி செய்வதோடு, காலத்துக்கேற்பவும் தியேட்டரை பலர் மாற்றுகின்றனர். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸில் ப்ரைவசி திரையரங்குகளைக் கொண்டுவந்துள்ளார். மல்டிபிளக்ஸ் தியேட்டரான அங்குள்ள எட்டு ஸ்கிரீனில் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட ஒரு ஸ்க்ரீனை இந்த பிரைவசி தியேட்டருக்காக ஒதுக்கியுள்ளார். ரூ. 3 ஆயிரத்து 999 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இந்த தியேட்டர் கொடுக்கப்படும். அவர்கள் விரும்பும் திரைப்படம் திரையிடப்படும். கரோனா அச்சம் உள்ள இந்த காலகட்டத்தில், அச்சமில்லாமல் தனியாகவும், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்கக்கூடிய பிரைவசி தியேட்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், எந்நிலையிலும் சினிமா தியேட்டர்களுக்கு உரிய மவுசு குறையாது. ஹோம் தியேட்டர் வசதி வந்தபோதே பயந்தனர். ஆனால், குடும்பமாக உட்கார்ந்து கலகலப்பாக படத்தை ரசிக்க முடியாது என்பதாலும், சுதந்திரமான ரசனைக்காகவும் தியேட்டருக்கு மக்கள் சென்றனர். தியேட்டருக்கு பதிலாக மக்களுக்கு இது மற்றொரு வசதியாகவே கருதவேண்டும் என்கின்றனர்.
நல்ல உட்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு, நல்ல வரவேற்பு, சிறந்த கேண்டின், வாகன நிறுத்த வசதிகளோடு செயல்படும் தியேட்டர்களை நாடி மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். எனவே, இன்னும் சில ஆண்டுகளுக்கு தியேட்டர்களை யாரும் சரித்துவிட முடியாது. கொரோனா ’இடைவேளை’ தான் , ’வணக்கம்’ அல்ல என்பதை உணரவேண்டும்.