நெல்லை மாநகராட்சி பகுதியில் கால்நடைகளால் பல களேபரங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் பாளையங்கோட்டை பெருமாள் நகர் பகுதியில் உள்ள ஸ்கூட்டரில் கல்லூரி மாணவியை மாடு ஒன்று குறுக்கே வந்து சாலையில் சரிந்தது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். திருமால் நகர் பெருமாள் புரம், என் ஜி ஓ காலனி பகுதிகளில் கால்நடைகளுக்கு பஞ்சமில்லை. எப்போதும் சாலைகளில் குறுக்கு மறுக்காக அவை திரிகின்றன.

பெரும்பாலான சாலைகளில் மாடுகள், நாய்கள் குறுக்கீடுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதில் பலர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். சில மரணங்களும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் பகுதியில் பெற்றோரை மிரட்டி பைக் வாங்கிய வாலிபர் ஒருவர் அதை ஓட்டிச் சென்ற போது மாடு குறுக்கே பாய்ந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்து இறந்தார்.

இரண்டு மாதங்களுக்கு இடையே, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் குறுக்கே மாடு வந்த சூழலில் பைக் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லப்பட, பின்னால் வந்த வாகனம் மோதி ஒருவர் இறந்தார். அந்த சாலையில் இப்போது தினமும் 20க்கும் மேற்பட்ட மாடுகள் அலைந்து திரிகின்றன.

பலமுறை மாநகராட்சி நிர்வாகம் கால்நடை வளர்ப்போரை கட்டுப்பாட்டுடன் வளர்க்குமாறு எச்சரிக்கிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இன்று தான் மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா வாய் திறந்து ‘அனுமதி பெற்று கால்நடை வளர்க்க வேண்டும்’என்று அறிவித்துள்ளார். எப்படி வளர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு குறித்த உத்தரவு இல்லை.
இனியாவது, மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை காவல்துறை இணைந்து வார்டுகள் தோறும் கால்நடை வளர்போரை அழைத்து கூட்டம் போட்டு மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மாநகராட்சி நிர்வாகம் செயலற்றதாகவே கருதப்படும் என்று பொதுமக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர்.









