உலகில் யுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி மனிதாபிமான நோக்கில் உதவிடும் முன்னணி தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம் தான் 4 நோபல் பரிசுகள் பெற்ற நற்பணி அமைப்பு. தற்போது உலகில் உள்ள 178 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் ஸ்தாபகர் சீன் ஹென்றி டியுனன்ட் ஸ்விட்சர்லாந்தின் தலைநகரமான ஜெனிவாவில் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி பிறந்தார். இவரது பிறந்த தினத்தையே உலக செஞ்சிலுவை சங்கதினமாகக் கொண்டாடி வருகிறோம்.
சீன் ஹென்றி டியுனன்ட் இளமையிலேயே சமூக சேவையில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். சிறைக் கைதிகள் படும் இன்னல்களைக் கண்ணுற்று சிறைக் கூடங்களுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். தனது 25 வது வயதில் நீதி நிறுவன அலுவலராக பணியேற்றார். தனது பணியின் நிமித்தம் பயணித்தபோது 24.06.1959ல் சால்பரினோ என்ற இடத்தில அவர் தங்க நேர்ந்தது. அங்கு ஆஸ்திரிய பிரஷ்ய படைகளுக்கிடையில் 15 மணி நேரம் நடந்த போரில் சுமார் 40ஆயிரம் பேர் போர்க்களத்தில் குற்றுயிராகக் கிடந்தனர். ஜீன் ஹென்றி டியுனன்ட் உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 நாட்கள் தூக்கமின்றி காயம்பட்டிருந்த அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
ஜெனிவாவுக்குத் திரும்பிய பின் சீன் ஹென்றி டியுனான்டுக்கு சால்பரினோ போர்க்களகாட்சிகள் அடிக்கடி நினைவுக்கு வந்தது. இது போன்ற நிகழ்வு இப் பூமியில் மீண்டும் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் போர் நடந்தால் போரில் காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காகவும் தனி அமைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தி 1862ல் சால்பரினோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் சிந்தனைகளால் கவரப்பெற்று ஜெனிவா பொது நல சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞரான கெஸ்டவ் மாய்னியர் உடனடியாக இந்த நோக்கங்களை உள்ளடக்கிய சர்வதேச அமைப்பை தோற்றுவிக்க ஏற்பாடுகளைச் செய்தார்.
1863ல் நடைபெற்ற இந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தான் இந்த அமைப்பிற்கான கொடியாக வெண்மைப்பின்புறத்தில் சிவப்பு நிற சிலுவை அடையாளம் கொண்ட கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு ஸ்விட்சர்லாந்து அரசு 22.06.1864ல் இந்த அமைப்பு சார்பில் ஒரு சர்வதேச மாநாடை நடத்தியது. அதில் 12 நாடுகள் பங்கேற்றன. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதலாவது ஜெனிவா உடன்படிக்கை என்றழைக்கப்படுகின்றன.
1874ம் ஆண்டுக்குள் 22 ஐரோப்பிய நாடுகளில் ரெட்கிராஸ் அமைப்பு உதயமானது. 1876ல் துருக்கியில் நடைபெற்ற போரில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் ரெட்கிராஸ் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. சிலுவை அடையாளம் தங்கள் மதத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்று கூறி இஸ்லாமிய நாடுகள் செஞ்சிலுவை சங்கஅமைப்பின் பெயரை மாற்றி செம்பிறை சங்க அமைப்புகளை தோற்றுவித்தன.
இவ்வாறாக 1864 முதல் 1914 வரை செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்க அமைப்புகள் எங்கெங்கு போர் நடந்தாலும் அங்கெல்லாம் தங்கள் சேவையை சிறப்பாகச் செய்து வந்தன. அதன்பிறகு போர்க்களத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் சேவையையும் விரிவு படுத்தின. இதன்படி போரில் காயம் பட்டவர்கள், போர்க்கைதிகள் குறித்த விவரங்களை செஞ்சிலுவை சங்க அமைப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசாங்கங்கள் வழங்கிட வேண்டும் என்றும்அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளை இச் சங்கம் மூலம் வழங்கவும் ஒத்துக்கொள்ளப்பட்டது.
தற்போதுசெஞ்சிலுவை சங்கத்திற்கென, மனிதாபிமானம், பரபட்சமின்மை, நடுநிலைமை, சுதந்திரத் தன்மை, தொண்டு புரிதல், ஒற்றுமை, சர்வ வியாபகத் தன்மை ஆகிய 7 அடிப்படை கடமைகள் தரப்பட்டுள்ளன.
உலகில் மிகச் சிறந்த விருதான அமைதிக்கான நோபல் பரிசு 1901ம் ஆண்டு இச்சங்கத்தின் ஸ்தாபகரான சீன் ஹென்றி டியூனான்டுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் இளம்பிறை சங்கத்திற்கு 1917, 1944 மற்றும் 1963 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவ்வாறு 4 முறை நோபல் பரிசு பெற்று செஞ்சிலுவை சங்க அமைப்பு சாதனை படைத்துள்ளது.
முதலாம் உலகப் போர் முடிந்ததும் 17.03.1920 அன்று இந்திய செஞ்சிலுவை சங்கம் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர். வில்லியம் மால்கம் ஹெய்லி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொளரவ பதவி வழி தலைவராக இந்திய குடியரசுத் தலைவரும் மாநில செஞ்சிலுவை சங்கங்களின் பதவி வழி தலைவர்களாக மாநில ஆளுநர்களும் உள்ளனர்.
1948ல் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த சீன் ஹென்றி டியுனான்ட் பிறந்த தினமான மே 8ஆம் தேதியை செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்க தினமாக கொண்டாட முடிவாயிற்று.
- முனைவர் டி.ஏ. பிரபாகர்,
திருநெல்வேலி .