‘மல்லாரி’ வித்தகர் ராஜண்ணா

0
241

மண்ணுலகை விட்டு உடலால் மறைந்தாலும், காற்று வெளியில் ‘மல்லாரி’ யாய் நிறைந்திருக்கிறார் இசை விற்பன்னர் ராஜண்ணா.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பொன்னார்கோயிலில், கோவிந்தசாமி பிள்ளை – தங்கத்தம்மாள் தம்பதிக்கு, 1932 மார்ச்.,14இல் பிறந்தவர் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா. புகழ்பெற்ற செம்பொன்னார்கோயில் நாதஸ்வர கலைஞர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர். , 11 வயதிலிருந்தே, தாய்வழி உறவினர்கள் மற்றும் சகோதரர் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.
சகோதருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி செம்பொன்னார்கோயில் பாரம்பரியத்தை பரப்பினார். மல்லாரி, ரக்தி மேளம் உள்ளிட்ட நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

மல்லாரி இசை என்பது நாதஸ்வரம் மற்றும் தவில் கருவிகளை கொண்டு, இசைக்கப்படும் மங்கல இசை வகையாகும், குறிப்பாக கோவில் திருவிழாக்களில் இறைவன் வீதி உலா வரும்போது, திருமண விழாக்களில் மாப்பிள்ளை அழைப்பு, மேடை, சபாக்களில் சம்பிரதாய வரவேற்புக்கு மங்கலமாக இசைக்கப்படுகிறது.
ரக்தி மேளம் என்பது, கோவில் திருவிழாவின் தேரோட்டத்தில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும்போது நாதஸ்வரம் மற்றும் தவில் மூலம் வாசிக்கப்படும் ஒரு பாரம்பரிய கர்நாடக இசை வகையாகும். சங்கராபரணம், சண்முகப்பிரியா போன்ற ராகங்கள் இதில் பிரபலமாக வாசிக்கப்படுகின்றன.

இதில் மல்லாரி இசையமைப்பது, ராஜண்ணாவின் கை வந்த கலையாக இருந்தது.இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், துாரக் கிழக்கிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்த ராஜண்ணா,தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்களில் ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக பணியாற்றிய சிறப்புக்குரியவர். காஞ்சி மகாபெரியவா அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்த அழைத்ததன் மூலம் அவரது ஆசியையும் பெற்றார்.


தமிழக அரசின் கலைமாமணி விருதை, 1980இல் பெற்ற ராஜண்ணாவுக்கு, சங்கீத நாடக அகாடமியின் தாகூர் விருது 2012இல் கிடைத்தது. சென்னை மியூசிக் அகாடமி 2018 இல் டி.டி.கே விருது வழங்கியது. மும்பை ஸ்ரீ சண்முகானந்தா ஃ பைன் ஆர்ட்ஸ் அண்ட் சங்கீத சபா, சங்கீத கலா விபூஷன் விருதை 2023 இல் வழங்கியது. ராஜண்ணா இந்த விருதை பெற்ற முதல் நாதஸ்வர கலைஞர் ஆவார்

இசைக்கான உயரிய விருதுகளையெல்லாம் பெற்று பெருமை சேர்த்த, ராஜண்ணா, தன், 93ஆவது வயதில், 17.12. 2025இல் சென்னையில் காலமானார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் தளப் பக்கத்தில், இரங்கல் தெரிவித்திருந்தார். சென்னை மியூசிக் அகாடமி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜண்ணா நம்மை விட்டு, மறைந்தாலும், புகழ்பெற்ற அவரது மல்லாரி இசை அனைத்து கோவில்களிலும், தேரோட்ட திருவிழாவின் போது, ‘நாதம் என்றும் வாழும்’ என்ற சொல்லுக்கிணங்க ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

– மா. நடராஜன்/ நெல்லை/

––––––––––––––––––––––––––––––––

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here