கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படைக் கல்லூரிக்கு நாடு முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தனர். அதில், தில்லியைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் தன்னுடன் பயிற்சிக்கு வந்த விமானப் படை அதிகாரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் விமானப் படை அதிகாரி அமிதேஷ் ஹார்முக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம், விமானப் படை அதிகாரியை விசாரிக்க மாநகர போலீசாருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி விமானப் படையிடமே அமிதேஷ் ஹார்முக்கை ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், கூடுதல் மகளிர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, விமானப் படை அதிகாரி அமிதேஷ் ஹார்முக்கை தங்களிடமே ஒப்படைக்கவும் அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தால் அவர் நீதிமன்றக் காவலில்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.