தமிழ்நாட்டில் குறிப்பாக நெல்லை,,தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஆளுங்கட்சியினர் ஆதரவில் சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் இயற்கை வளம் சூறையாடப்படுவதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது.
தமிழக அளவில் சுமார் 3907 ஹெக்டேர் பரப்பளவில் 2044 கல்குவாரிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சுமார் 5000 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குத்தகை காலம் முடிந்த பின்னரும் இத்தகைய குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 குவாரிகள் சட்டவிரோதமாக செயல் பட்டு வருவதாகவும் இதன்மூலம் 63 லட்சம் கன மீட்டர் அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. இத்தகைய சட்டவிரோத கல்குவாரிகளால் தமிழகத்தில் கனிமவளங்கள் சூறையாடப்பட்டு வருவதால் வெகுவேகமாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் அடைந்து வருகிறது.
2022 அரசு அறிக்கையின்படி நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 54 கல்குவாரிகளில் 53 சட்டவிரோதமாக செயல்பட்டதாக கண்டறியப்பட்டது. தற்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமான அளவில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளான இருக்கன் துறை, வடக்கன்குளம், சங்கனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் ஒரே பகுதியில் 20க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இவை அனைத்துமே ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் இக்காலகட்டத்தில் முழு நேர சூறையாடல் நடைபெறுகிறது என்கின்றனர். தமிழ்நாட்டு அரசும் தன் பங்குக்கு பல குவாரிகளின் குத்தகை உரிமை காலத்தை நீடித்து கொடுத்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத கல்குவாரிகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஒருபுறம் இருக்க கிரஷர் எந்திரங்கள் எழுப்பும் கடும் சத்தம், கனரக வாகனங்களின் புழுதி என ஒலி மாசு, காற்று மாசு நீர் மாசு ஆகியவற்றுடன் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. கல்குவாரியை சுற்றியுள்ள மக்களுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்படுவதோடு பயிர்களில் புழுதி படிவதால் மகரந்தசேர்க்கை தடைப் பட்டு விவசாயம் பாதிக்கபடுகிறது.
100 அடிக்கும் மேலாக நிலம் தோண்டப்படுவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதால் மழைநீர் ஊடுருவல் குறைந்து நீர்நிலைகள் வறண்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட காரணமாகிறது. கன்னியாகுமரியில் மருத்துவ மூலிகைகள் நிறைந்த பல மலைக் குன்றுகள் சூறையாடப்பட்டு, மாநில, ஒன்றிய அரசியல் தலைவர்கள் உதவியுடன் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வயல் வளம் மிக்க டெல்டா மண்டலத்திற்காக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்தது போல், மலை வளம் மிக்க கன்னியாகுமரி மாவட்ட அழிவுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் குரல் கொடுக்காவிட்டால்,தமிழகத்தின் பெருமளவு இயற்கை வளம் அழியும் வாய்ப்பு உள்ளது. இயற்கையை பாதுகாப்பது அரசின் கடமை. அதில் அது தவறும் போது எதிர்த்து போராட வேண்டியது மக்களின் உரிமை.













