கோவை வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் ஆனந்தன் (28). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது மனைவிக்காக ஒன்றரை பவுன் தங்கச் செயின் ஒன்றை வாங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்தனின் மனைவி அந்தத் தங்கச் செயினை தனது வீட்டு பீரோவில் வைத்தார் . இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபு என்பவரின் மனைவி அனிதா (25 )என்ற பெண் பார்த்துள்ளார்.
சில நாட்கள் கழித்து ஆனந்தனின் மனைவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் துணியை காயப் போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பீரோ கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து பீரோவில் உள்ளே பார்த்தபோது தங்க செயின் காணாமல் போயிருந்தது.
தொடர்ந்து ஆனந்தன் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிதா என்ற பெண் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிதா என்ற பெண்தான் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து ஒன்றரை பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அனிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.