தலைவர்களின் சந்திப்புகளும் தறிகெட்ட கற்பனைகளும்

0
785

இந்திய பிரதமர் _ சீன அதிபருக்கு இடையேயான முறைசாரா சந்திப்பு ஒருவித நல்லெண்ணத்தின் அறிகுறியாகவும், பரஸ்பர கருத்து பரிமாற்றத்துக்கான வாய்ப்பாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், இந்த சந்திப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்றம் வரும், இப்போதைய மந்த நிலையில் மாற்றம் வரும் என்பது போன்ற மீமிகை வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் அத்தகைய கற்பனை கதைகளை களிப்புடன் கூறிவருகின்றனர்.

இச்சந்திப்பால் சீனாவின் ஏற்றுமதி இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதே தவிர இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க அதிக வாய்ப்பில்லை என்பதே கசப்பான உண்மை. ஏனெனில் சீனா 2.3 டிரில்லியன் டாலர் அளவுக்கான உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆசிய நாடுகளுக்கு 47.8 சதவிகிதமும் , அமெரிக்க நாடுகளுக்கு 22. 4 சதவிகிதமும், ஐரோப்பிய நாடுகளுக்கு 19.1 சதவிகிதமும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இந்தியாவின் மொத்த ஜிடிபியே 2.3 டிரில்லியன் டாலர் அளவுக்குதான் உள்ளது.

மேலும், சீனா மற்ற நாடுகளிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்து அதனை உற்பத்தி பொருட்களாக ஏற்றுமதி செய்வதோடு அந்நாடுகளின் சந்தை செயல்பாட்டையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. இதனால்தான் அமெரிக்காவுக்கும் அதற்குமிடையே புகைச்சல் எழுந்தது.

இந்தியாவின் தொழில் உற்பத்தி குறைவாகவே இருக்கிறது. மொத்த ஜி.டி.பி.யில் 16 சதவிகிதம் தான் உற்பத்தியின் மூலம் கிடைக்கிறது. அரசு உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று கூறி வந்தாலும் அந்த முயற்சி கைகூடவில்லை, மேக் இன் இந்தியா திட்டமும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை என்பதே நிதர்சனம்.
சீனா தனியார் துறையை அங்கீகரித்தாலும், அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களே நாட்டின் உற்பத்தியிலும் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவோ பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ள நிலையில் தொழில்துறையில் நிறைவெய்த இன்னும் பல படிகளை கடக்கவேண்டியுள்ளது என்பதை கனத்த மனதுடனாவது ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

இது தவிர, தொலைக்காட்சி விவாதமொன்றில் இந்திய சீன எல்லை பிரச்சனை தீர்வு வரும் என்று கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஒருவர் கட்டியம் கூறினார். ஜவஹர்லால் நேருவின் பஞ்சசீல கொள்கையை ஏற்றுக் கொண்ட சீனா, கையெழுத்தின் மை காய்வதற்குள் இந்தியாவுக்கு எதிராக போர்த் தொடுத்து எல்லைப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்ததை வரலாறு மறந்திருக்காது. இலங்கையில் தனது வல்லாதிக்கத்தை நிறுவுவதற்காக, தமிழர்களைஅழித்த திட்டத்துக்கு உதவியதும் நினைவிலிருந்து நீங்கியிருக்காது.

மற்றபடி, இருநாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு ஓரளவு புரிதலை ஏற்படுத்தும். அடுத்தக்கட்ட கலந்துரையாடலுக்கு அச்சாரமாக அமையும் என்று நம்பலாம்.

_ சிறப்பு செய்தியாளர் க. அலெக்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here