நினைத்தது அழகு கோலம் நடந்தது அலங்கோலம் அழகு சிகிச்சை அவலம்

0
1387


திரைத்துறை என்பது அழகின் கலைக்கூடம். அங்கு அலங்காரமும் ஆடம்பரமும் அத்தியாவசியம். அதனால் செயற்கை ஒளியில் பல நட்சத்திரங்கள் மின்ன நினைக்கின்றன. அது நிலவின் ஒளியல்ல, சூரியச் சுடர் என்பதால் சில பொசுங்கிவிடுகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா வில்சன், பின்னர், பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் வெற்றியடைந்ததால்காதலிக்க யாருமில்லை’ போன்ற சில திரைப்படங்களில் கமிட் ஆனார். நடிகை என்பதைத் தாண்டி மாடலிங்கிலும் பிரபலம். எனவே, தமது முகத்துக்கு புதுப்பொலிவு கொடுக்க முயன்றார். இப்போது பழைய பொலிவையும் இழந்து நிற்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி மருத்துவர் பைரவி செந்திலிடம் முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்றுள்ளார் மார்ச் 25ஆம் தேதி மருத்துவர் வனிதா என்பவரும், மணி என்பவரும் இணைந்து போடாக்ஸ் என்ற சிகிச்சை அளித்துள்ளனர். அதற்கு கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளார் ரைசா. 10 நாட்களுக்குப் பின்னரும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அணுகியுள்ளார். டெர்மா பில்லர்ஸ் என்ற சிகிச்சைக்கு மருத்துவர் பைரவி பரிந்துரைத்துள்ளார்.
முதலிலேயே அந்த சிகிச்சைக்கு ஏன் பரிந்துரைக்கவில்லை, பணம் பறிப்பதுதான் நோக்கமா என கேள்வி எழுப்பியுள்ளார் ரைசா. அவர் பல விளக்கஙள் கொடுத்து, ஏப்ரல் 17ஆம் தேதி டியர் ஃப்ரீ ஃபில்லர் என்ற சிகிச்சையை அளித்துள்ளார். அதற்கு கட்டணமாக 65 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார் ரைசா.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் தான் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்தில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதுடன் முகம் வீங்கியுள்ளது. தனது வீங்கிய முகத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவு செய்த ரைசா, தான் கேட்ட சிறிய அளவிலான சிகிச்சைக்கு மாறாக வேறு சிகிச்சையை வலுக்கட்டாயமாக அளித்ததால் தான் தனது முகம் பாதிப்புக்குள்ளானதாக மருத்துவர் பைரவி மீது குற்றம்சாட்டினார். மேலும், தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேவையற்ற அவதூறு பரப்புவதாகவும், மானநஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் செலுத்த வேண்டுமெனவும் எனவும் மருத்துவர் பைரவி செந்தில் தரப்பு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா மூன்று நாட்களில் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்டு, சமூக வலைதளங்களில் வெளியிடாவிட்டால், மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பைரவியின் வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் தெரிவித்துள்ளார்.


ரைசாவிற்கு ஏற்பட்டது பயப்படக்கூடிய பக்கவிளைவு இல்லை. அரிதாக ஏற்படக்கூடியது,. இயற்கையாகவே குணமடையும் என்றும் மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார். இதுபோன்று அழகு சிகிச்சைகளின் போது ஏற்படும் உடல்நலக்குறைபாடு தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்துவது வழக்கம்.அந்த விசாரணை ரைசா விடயத்திலும் நடக்கும்.
எது எப்படியோ, அழகுக்காக செய்யப்படும் சிகிச்சைகள் ஆபத்தானவையா, எந்த அளவுக்கு ஆபத்தானவை என்று ஆராய்ந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே அவற்றை மேற்கொள்ளவேண்டும் என்றே தெரிகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி என்பது உறுப்பு திருத்தும் சிகிச்சையின் முக்கிய அம்சம். அதில் ஒரு பிரிவே அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சையான காஸ்மெட்டிக் சர்ஜரி. பிளாஸ்டிக் சர்ஜர் விபத்தில் உறுப்பு சேதம் அடைந்தால் கூட செய்யப்படுவது. காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது முழுக்க முழுக்க அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை.
முகச்சுருக்கத்தை சரி செய்வது, மார்பகங்களை பெரிதாக்குவது, வயிற்றில் பிரசவ தழுமபை மறைப்பது எனத் தொடங்கி, உடலை மெலியவைப்பது, தடிக்க வைப்பது வரை இதன் கைங்கர்யம் விரிவாகும்.
‘பிளாஸ்டிக் சர்ஜரி என்றதும் தோலுக்கு பதிலாக பிளாஸ்டிக்கை பயன்படுத்துவார்களோ என்ற எண்ணம் வரும். ஆனால், அப்படி அல்ல. ‘பிளாஸ்டிக்கோஸ்’ என்ற கிரேக்க வார்த்தைக்கு ’ உருச்சீரமைப்பு ( மோல்டிங்) என்று பொருள். அவ்வளவுதான்.


அழகு சிகிச்சையின் வகைகள் கணக்கில் அடங்கா. அது சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோ உள்ளிட்ட பல மருத்துவ முறைகளிலும் இருக்கிறது. ஆனால், உருச்சீரமைப்பு வேலையை சித்தம், அதை பின்பற்றி ஆயுர்வேதம், ஆங்கில, கிரேக்க, ரோமானிய, சீன பழைய மருத்துவ முறைகளில் மட்டுமே அறுவை சிகிச்சை முறை இருப்பது தெரியவந்துள்ளது.
நம் தோலுக்கும் தசைக்கும் இடையில் இருக்கும் ’வால்ஃபேட் ’ என்னும் கொழுப்பை அகற்றும் முறைக்கு ’லிபோசக்சன்’ என்று பெயர். இதன் மூலம் குண்டான உடலை மெல்லுடலாக்கலாம். குடல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் கொழுப்பு ஆர்கன் ஃபேட். இதை உடற்பயிற்சி, ஹார்மோன் சுரப்பு சரிபாடு, உணவுப்பழக்கம் மூலம் குறைக்கலாம். பெண்களுக்கு பெரும்பாலும் வால்ஃபேட்டே இருப்பதால் கொழுப்பை குறைப்பது எளிது.
இப்படி செயற்கையாக கொழுப்பை அகற்றுவது சரியா? என்றால், தவறில்லை என்கின்றனர் மருத்துவர்கள். தேவையற்ற கொழுப்பு அகற்றப்படுவதால் இதய, சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடுகள் நன்றாகும். குண்டாக இருப்பதால் வரும் எலும்பு சம்பந்தமான ஆர்த்தரைட்டிஸ், ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் வருவதும் குறையும் என்பது அவர்கள் வாதம்.
ஆனால், சில வேளை இந்த அறுவை சிகிச்சை வாழ்நாள் பிரச்சினையாகவும் மாறிவிடும். மயக்க மருந்து மற்றும் ஒவ்வாமை எதிர்வினையால் சுவாசத்தில் சிக்கல், இரத்தப்போக்கு ஏற்படும் . இது அதிர்ச்சிக்கு வழிவகுக்கும். இரத்த உறைவு, குறிப்பாக கால் அல்லது இடுப்பில் கொழுப்பை உறிஞ்சும்போது இரத்த உறைவு-ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் ஏற்படும். . வெவ்வேறு உடல் பகுதிகளிலிருந்து வெவ்வேறு அளவு கொழுப்பு திசுக்களை அகற்றுவதன் மூலம் உடலில் சமச்சீரற்ற தன்மை ஏற்படும். தோல், தசை, நரம்புகள் மற்றும் உள் உறுப்புகளுக்கு சேதம்ஏற்படும். தளர்வான கொழுப்பு செல்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து இரத்த ஓட்டத்தைத் தடுக்கவும் கூடும். கொழுப்பு அகற்றப்படும் இடத்தில் உடல் திரவம் குவிக்கப்படும். உணர்வின்மை, வடு, தோல் எரிச்சல், தோல் நிறமாற்றம், வீக்கம் உருவாகவும் கூடும்,. இவை மாற பல மாதங்கள் ஆகலாம். கொழுப்பை அகற்றும் பகுதிக்கு மேலே உள்ள தோல் செல்கள் அழிவதால் கடுமையான தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.


உணவுக் கட்டுப்பாடு, யோகப்பயிற்சி, உழைப்பு மூலமாக கொழுப்பை அகற்றலாம். ஆனால், அதற்கு அதிக சிரமம் எடுக்கவேண்டும். காலதாமதமாகும் என்பதால் குறுக்கு வழியை கடைப்பிடிக்கின்றனர்.
முடி கொட்டும் பிரச்சினைக்கு உடல், மன அயற்சி, வெம்மை , புறச்சூழல் முக்கிய காரணமாகின்றன. அதற்கான காரணங்களை கண்டறிந்து களைந்தால் நிச்சயம் நன்மை விளையும். ஆனால், உடனடி பலனுக்காக ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் என்ற முடி மாற்று அறுவை சிகிச்சையை இப்போது அதிகமாக செய்துகொள்கிறார்கள்.
இதில் இரண்டு வகை உண்டு. ஃபாலிகுலர் யூனிட் ட்ரான்ஸ்பிளாண்டேஷன் என்ற முறையில் பின்னந்தலையில் இருக்கும் தோல் பகுதியை எடுத்து முன் தலையில் வைப்பார்கள். ஃபாலிகுலர் யூனிட் எக்ஸ்ட்ராக்‌ஷன் என்ற முறையில் பின்னந்தலையில் இருக்கும் முடிகளை முடி இல்லாத இடத்தில் நடுவார்கள்.
பிரசவத்துக்குப் பிறகு இடுப்புப் பகுதியில் தளர்ந்து போகும் தசைகளை சரிசெய்யும் ’டம்மி டக்’ சிகிச்சை இப்போது பிரபலமாகி வருகிறது.


தொப்புளுக்குக் கீழே கொழுப்பு படிவங்களைக் கொண்ட நோயாளிகளுக்கு பகுதி வயிற்று டக் செய்யப்படுகிறது. அடிவயிற்றில் ஒரு சிறிய கீறல் செய்யப்படுகிறது, தோல் அடுக்கு வயிற்று சுவரிலிருந்து பிரிக்கப்படுகிறது. அதிகப்படியான கொழுப்பு மற்றும் தோல் அகற்றப்படும். பகுதி வயிற்று டக் தோல் மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது.இதுவும் லிபோசக்‌ஷன் போல் ஆபத்தான சிகிச்சையே.
அகன்ற பெரிய மார்பகத்துக்காக சிலிக்கான் சிகிச்சை செய்கிறார்கள். இது புற்றுநோய் அபாயம் கொண்ட சிகிச்சை முறையாகும். இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்தப்படுகின்றன. உப்பு நீர்; கொண்ட செயற்கைப் பொருளையும் சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன்படுத்துகிறார்கள்.
இந்த செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டுஅறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்றும் குமடடல் போன்ற விளைவுகள் ஏற்படுவதுண்டு. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்குகின்றன.
நமது உடலலின் இயற்கையானதன்மை செயற்கையான பொருட்களை நிராகரிக்கும் என்பதால் மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவிடவும் வாய்ப்புண்டு. இதனால், இயற்கையான மார்பகங்களுக்கு உள்ள அழகும் குறைந்துவிடுகிறது.
இளமையை விலை கொடுத்து வாங்கலாம் என்று நினைத்தால் அதற்கு வட்டியே அதிகம் வந்துவிடுகிறது, வெள்ளைத் தோலைப் பெறுவதற்காக தோலின் மேற்புறத்தை (டெர்மிஸ்) உரித்தெடுக்கும் கெமிக்கல் பீலிங் சிகிச்சை நடத்துகிறார்கள் .
வெள்ளைத் தோலைப் பெறுவதற்காக தோலின் மேற்புறத்தை (டெர்மிஸ்) உரித்தெடுக்கும் கெமிக்கல் பீலிங் சிகிச்சை நடத்துகிறார்கள் . முகத்தில் உள்ள சுருக்கங்களை அகற்றுவதற்காகவும் அக்குள் வியர்வையைக் கட்டுப்படுத்துவதற்காகவும் போடக்ஸ் சிகிச்சை செய்யப்படுகிறது, இதுவும் இயற்கைக்கு எதிரான யுத்தமாக இருப்பதால் ஆபத்து அதிகம் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, இதன் பலன் 3 முதல் 10 மாதங்களே நீடிக்கும். 50 வயதான ஒருவருக்கு இது 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை தேவைப்படலாம். எனவே, அடிக்கடி தோலைத் துளைத்தெடுக்க வேண்டும்.
ஸ்கின் கிராஃப்டிங் என்பது உடலின் ஒரு இடத்தில் உள்ள சரும திசுக்களை, ரத்த ஓட்டத்தைத் துண்டிக்காமல் அந்த இடத்திலிருந்து எடுத்து, மற்றொரு இடத்துக்கு மாற்றுவதாகும். தீக்காயம், திறந்த காயங்கள், நோய் தொற்றால் சருமம் இழக்கப்படுவது போன்ற அனைத்துக்கும் கிராஃப் டிங் சிகிச்சை ஏற்றது.
இந்த சிகிச்சையிலும் சருமத்தின் நிறங்கள் எப்போதுமே கச்சிதமாகப் பொருந்தாது, தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. “ஸ்கின் கிராஃப்டிங் சிகிச் சைகள் நல்ல மருத்துவ மனையில், அனுபவம் மிக்க மருத்துவர்களின் மேற்பார்வையில் செய்யப் படாவிட்டால் ’தெய்வ மகன்’ தோற்றம் தான்,.
இதுபோன்ற சிகிச்சைகளை செய்ய ஒருவர் ஐந்தரை வருடங்கள் அடிப்படை மருத்துவம் படித்து, 3 வருடங்கள் பொது அறுவை சிகிச்சை முடித்து, அதற்கு மேலும் 3 ஆண்டுகள் பிளாஸ்டிக் சர்ஜரி படிக்க வேண்டும். அறுவை சிகிச்சையின் செயல்முறையை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் ஒருவர் இத்தகைய சிகிச்சையை மேற்கொண்டால் இழப்புகளை தவிர்க்க முடியாது என்கின்றனர்.
அதுமட்டுமல்ல, ஆயிரம் சிகிச்சை முறைகளால் அழகை மேம்படுத்தினாலும், அவற்றை அடிக்கடி பராமரிக்க வேண்டும். திரை நட்சத்திரங்களுக்கும் பிரபலங்களுக்கும் மேடைத்தோற்றம் அவசியம் என்பதால் அவர்கள் அதை செய்துகொள்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த சிகிச்சையால் பணச்செலவு மட்டுமல்ல, உடல் நலிவும் ஏற்படுகிறது.


எடுத்துக்காட்டாக நடிகை ஸ்ரீதேவி, பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஆகியோர் மூக்கு அறுவை சிகிச்சை ம ற்றும் சரும சிகிச்சை செய்தவர்கள். அந்த சிகிச்சையையே அவர்கள் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார்கள். ஸ்ரீதேவி அந்த உடல் கஷ்டங்களை உணர்ந்தார். மைக்கேல் ஜாக்‌சன் மர்ணத்துக்கு கூட அவரது அழகு சிகிச்சை காரணம் என்று பேசப்பட்டது.
செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்தபின்னரும் அதை ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். அந்த மார்பகங்களை நிலையாக பயன்படுத்த முடியாமலும் போகலாம். .
காஸ்மெட்டிக் சிகிச்சையில் அடங்கிய அறுவை சிகிச்சையை எத்திக்கல் சர்ஜரி’ என்பார்கள். ஆரோக்கியமான ஒருவரை அழகுபடுத்துவதற்காக செய்யும் சிகிச்சை என்பதால் அநியாயமாக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதாலேயே ’எத்திக்கல் ’ என்கிறார்கள்.
அழகு சிகிச்சை செய்யும்முன்பு வயது, வேறு சிகிச்சை பற்றிய விவரம், குடும்பச் சூழ்நிலை அனைத்தையும் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும்,
ஆனால், இப்போது பணத்துக்காக முழுமையாக படிக்காமல் ஆங்காங்கே அழகு சிகிச்சை மருத்துவமனைகளை தொடங்குகிறவர்கள் இந்த எத்திக்சை மறந்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மேல் தட்டு மக்கள் என்றாலும், சில வேளை உயிரிழப்ப்பை கூட ஏற்படுத்தி விடலாம் என்பதால் மிகவும் சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, இந்த அழகு சிகிச்சைகளை செய்தட்தால் கச்சிதமாக உடலை வைத்திருப்பதாக அளிக்கப்படும் பேட்டிகளால் நடுத்தர மக்களும் இப்போட்து அதை நாடத் தொடங்கிவிட்டனர். அதுமிகவும் பேராபத்தாக இருக்கிறது.
நடிகர்களுக்கு7 அழகு சிகிச்சை தேவை. நமக்கு ஆரோக்கிய சிச்கிச்சையே தேவ. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடக்கூடாது. அழகு இயற்கையானது. அதை இயற்கை முறையில் பராமரிப்பதே உகந்த முரை என்பதை யாவரும் நினைவில் வைக்கவேண்டும். இல்லையேல், மைக்கேல் ஜாக்சன், ரைசா, நிலைமையை நினைத்து பார்க்க வேண்டும். யோகா, உடற்பயிற்சி போன்ற மரபார்ந்த வழிமுறைகள் பல இருக்கின்றன, அவற்றை பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here