சுகாதார எச்சரிக்கை: உங்கள் பிள்ளைகளுக்கு இந்த வில்லுண்டி வேண்டாம்

0
1105

சிறுவயதில் சிறிய மரக்கொப்பின் Y கிளையில் தோலாலான வாரை இணைத்து செய்த வில் உண்டியை ( உண்டி வில்,கவண்) பயன்படுத்தி குருவிகளை வேட்டையாடிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். இப்போது கூட கிராமங்களில் இந்த வில்லுண்டியை தூக்கிக் கொண்டு, விடுமுறையை காட்டில் கழிக்கும் சிறுவர்கள் அநேகர்.

நகர்ப்புற சிறுவர்களுக்கும் இத்தகைய வில்லுண்டி விளையாட்டு ஆர்வமாக இருக்கும். அது ஆதி முதலே நம் ரத்தத்தில் கலந்துவிட்ட வேட்டையாடும் உணர்வு. இதற்காக சில இடங்களில் Y வடிவ பிளாஸ்டிக்கில் ரப்பரை கட்டி இழுவையாக பயன்படுத்தும் வகையில் வில் உண்டி தயாரித்து விற்கிறார்கள். அது கூட பரவாயில்லை.

ஆனால், கன்னியாகுமரியில், கன்னியாகுமரி அம்மன் சன்னதி அருகே விற்கப்படும் வில்லுண்டிகள் உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு உலை வைபவையாக இருக்கின்றன. இவற்றில் இழுவையாக பயன்படுத்தப்படும் ரப்பர், கிடை நோயாளியாக படுக்கையில் இருப்போர் சிறுநீர் கழிப்பதற்கு ப்ளாடருக்கு போகும் ரப்பர் டியூப்பில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் பணியாற்றி விட்டு தற்போது கேரளாவில் வசிக்கும் ஜோதி என்பவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

இது படுக்கை நோயாளிகளுக்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரப்பர் பொருளாகும். அதுவும் சிறுநீர் தொடர்பானது. அதை அப்படியே எடுத்து வந்து வெளியே விற்று, அதன் மூலம் இந்த வில்லுண்டி தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்திய உடனேயே கைகள் மூலம், முகம் துடைக்கும் போதோ, உணவுண்ணும் போதோ எவ்வகையிலாவது மோசமான கிருமிகள் நம் உடலுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

அதிலும், மஞ்சள் காமாலை, தொழுநோய், சிறுநீரகத் தொற்று கொண்டவர்களுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நினைக்கவே மிகவும் பயங்கரமான விளைவுகளை தரும் என்று எச்சரிக்கிறார்.

சுகாதாரத்துறை அலுவலர்களும், காவல், வருவாய்த் துறையினரும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். பெற்றோர்களும் விலை மலிவான விளையாட்டு பொருள் என்பதனால் (ரூ30க்கு விற்கப்படுகிறது) இத்தகைய வில்லுண்டிகளை பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். இத்தகைய வில்லுண்டி செய்வோர், தூய பிளாஸ்டிக் மூலம் இழுவையை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here