நெல்லை தியாகராஜ நகரை சேர்ந்த ராமசந்திரன் மனைவி சந்திரிகா (58).இவருக்கு கடந்த சில நாட்களாக தலைவலி இருந்துவந்துள்ளது.இந்நிலையில் இன்று மதியம் 12-30 மணியளவில் சந்திரிகாவிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கணவர் ரவிசந்திரன் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்துள்ளார்.
பின்னர் அவரது வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் சந்திரிகாவை ஏற்றி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் சந்திரிகாவை பரிசோதனை செய்துவிட்டு, அடுத்துள்ள கட்டடத்தில் அமைந்த தாய் வார்டு பகுதியில் அனுமதிக்குமாறு அனுப்பி வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் போதுமான படுக்கை வசதி இல்லை எனக்கூறி சந்திரிகாவை அழைத்து வந்த ஆம்புலன்சை வேறு வார்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக அங்கும், இங்கும் அலைக்கழிக்கப்பட்ட பின்பு, மருத்துவமனையில் உள்ள கேன்சர் வார்டு (கொரனா தீவிர சிகிச்சைப் பிரிவு) பகுதியில் ஆம்புலன்சில் இருந்து இறக்கி வைத்துள்ளனர். ஒருவழியாக அவரை சிகிச்சைக்கு அனுமதிக்க மருத்துவர்கள் முன்வந்தனர். அதற்கான பரிசோதனை செய்தபோது அவரது உயிர் பிரிந்திருந்தது.

தனது மனைவி உயிரிழப்புக்கு மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழிப்பு தான் காரணம் என சந்திரிக்காவின் கணவர் ரவிச்சந்திரன் குற்றம் சாட்டுகிறார். மருத்துவமனையில் படுக்கை கேட்டு அரை மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் லேயே தவிக்க விட்டு நோயாளி உயிரிழக்க காரணமாக இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் நெல்லை மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி தீவிரமாக கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டபோது, வென்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகள் மிக குறைவாக உள்ளதாகவும், அதனால் அதிதீவிர பாதிப்புக்குள்ளோரை மட்டும் அனுமதிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.















