பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங் கால் மண்டபத்தில் தொழிலதிபர் ஒருவரின் இல்லத் திருமண விழா வெகு விமரி சையாக நடைபெற்றது.
இந்த ஆயிரங்கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆனித் திருமஞ்ச னம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருளுவர்.
ஆயிரங்கால் மண்டபம் புனிதமான இடம் என்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது இல்லை. இந்நிலையில், சிவகாசி பட்டாசு நிறுவன பங்குதாரர் ஒருவரின் இல்ல திருமண விழா ஆயிரம்கால் மண்டபத்தில் நடந்துள்ளது. அப்போது, ஆயிரங்கால் மண்டபம் மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கருவறை விமானத்தில் ஏறியும் மலர் அலங்காரம் செய்துள்ளனர்.
ஆகமத்தை மீறிய இந்த செயல் வெளியான பின்புதான் இரு தீட்சிதர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஆனாலும், நாட்டிய நிகழ்ச்சிக்காகத்தான் ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் அங்கு நடத்தப்பட்டது என்று உடான்ஸ் விட்டனர். பட்டு என்ற தீட்சிதரை பணிநீக்கம் செய்தனர்.
ஆனாலும், திருமணத்தை நடத்திவைத்த ராஜா என்ற குருக்கள் ‘ இது பெரிய விஷயமில்லை’ என்று அலட்சியமாக சொன்னார்.
இதே தீட்சிதர்கள் நீதிமன்ற உத்தரவு பெற்று தமிழில் தேவாரம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கினர். அவர் இருந்து பாடிய இடத்தை கழுவிவிட்டு சம்ரோஷணம் செய்தனர். இப்போது காசுக்காக கண்டபத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, ‘ இனி இப்படி நடக்காது’ என்று ஜகா வாங்குகின்றனர் என பொதுமக்கள் பொறுமுகின்றனர்.
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி. சாமிநாதன், ‘ இவர்கள் அரசையும் மதிப்பதில்லை, அறநிலையத்துறையையும் மதிப்பதில்லை, தமிழையும் மதிப்பதில்லை, சம்பிரதாயத்தையும் மதிப்பதில்லை’ என்றார்.
திருமண விழாவுக்கு வாடகைக்கு விட்டதன் மூலம் கோயில் மண்டபம், விமானம் ஆகியவற்றை தீட்டுபடுத்திய தீட்சிதர்களை சிறையில் தள்ளவேண்டும், அறநிலையத்துறையிடம் கோயிலை ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். இதுவே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.