சென்னை நொளம்பூர் சர்வீஸ் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் நேற்று அதே பகுதியை சேர்ந்த சரவணன் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எரிந்த நிலையில் கிடந்த உடலை கண்டு அதிர்ச்சியடைந்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் பெண் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்தது.உடனடியாக அந்த பெண் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சடலம் கிடந்த இடத்திற்கு அருகே கைப்பை ஒன்று இருந்தது.அந்த பையில் மதுரவாயல் ஆலப்பாகத்தை சேர்ந்த ரேவதி(36) என்ற பெண்மணியின் ஆதார் கார்டும்,மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிப்புரிந்த அட்டையும் இருந்தது.
இதனையடுத்து கைப்பற்றிய விவரங்களை வைத்து விசாரணை நடத்திய போது ரேவதியின் கணவரான முருகன் மதுரவாயல் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் ஒன்றை அளித்தது தெரியவந்தது.இதன் பின்பு முருகனிடம் ரேவதி குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை நண்பர் ஒருவரிடம் கொடுத்ததாகவும்,இதனால் நகை கொண்டு வரும்படி ரேவதியுடன் சண்டை ஏற்பட்டதாக கணவர் தெரிவித்தார்.
இதனையடுத்து ரேவதி பணிப்புரியக்கூடிய இடத்தில் சென்று விசாரித்த போது ரேவதி மற்றும் பேட்டரி ஆட்டோ ஓட்டுனரான தெலுங்கானாவை சேர்ந்த திம்மப்பா(24) ஆகிய இருவரும் கடந்த 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பணிக்கு வராமல் 21ஆம் தேதி பணிக்கு வந்தது தெரியவந்தது.இதனால் ரேவதியை கணவரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச்சொல்லி அனுப்பியது தெரியவந்தது.
போலீசார் திம்மப்பாவை பிடித்து விசாரணை செய்யும் போது திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
மாநகராட்சியில் ஒன்றாக பணிப்புரியும் போது ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நெருங்கி பழகி கள்ளத்தொடர்பில் இருந்து வந்தோம்.பணம் தேவைப்பட்டதால் கடந்த 16 ஆம் தேதி ரேவதியின் கழுத்திலிருந்த 5 சவரன் நகையை கேட்டு வாங்கி ஆலப்பாக்கத்தில் உள்ள அடகு கடையில் 35ஆயிரம் ரூபாய்க்கு வைத்து ரேவதி 20,000 ரூபாயும், தான் 15,000 எடுத்து கொண்டோம்.
பின்னர் பணத்தினை வைத்து வேலைக்கு செல்லாமல் 4 நாட்களாக ஊர் சுற்றினோம்.இந்த நிலையில் ரேவதி கழுத்திலிருந்த செயின் காணாமல் போனது குறித்து அவரது கணவர் ரேவதியிடம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் கடந்த 21ஆம் தேதி மாலை ரேவதி திம்மப்பாவிடம் நகை கேட்பதற்காக மதுரவாயல் மேம்பாலத்திற்கு வந்த போது இருசக்கர வாகனத்தில் இருவரும் நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதருக்கு சென்றனர்.அப்போது ரேவதி 5 சவரன் நகையை மீட்டுதரக்கோரி திம்மப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இருவருக்கும் வாக்குவாதம் முற்றி திம்மப்பா ரேவதியை அடித்ததால் சத்தம் போடவே அருகிலிருந்த பேப்பரை எடுத்து வாயை அடைத்து,அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கை,கால்களை கட்டி கையிலிருந்த கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.இதனையடுத்து ரேவதியை குப்பை முட்புதரில் போட்டு தீவைத்து எரித்து சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் திம்மப்பா மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.