மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கவுசல்யா, பிஎஸ்சி பட்டதாரி. இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் என்பவரோடு திருமணம் நடைபெற்றுள்ளது. அதே 6 மாதங்களாக மணிகண்டன் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக பல முறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கௌசல்யா தனது தாயாருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது, கௌசல்யாவின் தாய் அழகம்மாள் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து அவருக்கு முதலுதவி வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, தீக்குளிக்க முயற்சி செய்த தாயார் அழகம்மாள் மற்றும் அவரது மகள் கௌசல்யா ஆகியோரை போலீசார் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.