பஸ்சுக்குள் புகுந்து இன்ஜினியர் வெட்டிக் கொலை

0
1187

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் காளத்தி. இவரது மகன் சதிஷ்குமார் (28). பிஇ பட்டதாரி. இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் செய்யாறு வேல் சோமசுந்தரம் நகரில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க இன்று காலை காஞ்சியில் இருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தார். காலை 11 மணியளவில் கண்ணியம் நகரில் இறங்கிய அவர், அங்குள்ள கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 10க்கும் மேற்பட்ட கும்பல், திடீரென வீச்சரிவாளுடன் இவரை தாக்க பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதிஷ்குமார், வேகமாக ஓடினார். அப்போது அவ்வழியே வந்த தனியார் பஸ், அங்கிருந்த நிறுத்தத்தில் நின்றிருந்தது. கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அந்த பஸ்சுக்குள் ஏறி உயிர்தப்ப முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் பஸ்சுக்குள் ஆயுதங்களுடன் ஏறியதால், அதில் இருந்த பயணிகள் நாலாப்புறமும் சிதறி ஓடியபடி இறங்கினர். டிரைவரின் பின்பக்க சீட்டில் உயிருக்கு அஞ்சி பதுங்க முயன்ற சதிஷ்குமாரை, அந்த கும்பல் சரமாரி வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவர், தப்ப முடியாமல் மரண ஓலமிட்டார். வெட்டுப்பட்ட சதிஷின் ரத்தம் பஸ் முழுவதும் தெறித்தது. மர்ம கும்பலால் வெட்டப்பட்ட சதிஷின் தலை சாய்ந்தது. இதையடுத்து அந்த கும்பல் பஸ்சில் இருந்து இறங்கி தயாராக இருந்த காரில் ஏறி காஞ்சிபுரம் நோக்கி வேகமாக சென்றது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பயணிகள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த செய்யாறு போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here