குமரி மாவட்டம் சாமிதோப்பு பஞ்சாயத்துக்குட்பட்ட பூலாங்குளம் மற்றும் சுற்றி அமைந்துள்ள வயல்வெளிகள், வாழைதோட்டங்கள், தென்னந்தோப்புகள் செல்லும் வழியில் பார்த்தீனிய விஷசெடி அதிகமாக வளர்ந்து வருகிறது.
தற்போது பெய்து வரும் மழையினால் ஒரு ஆள் உயரத்துக்கு மேலாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால், குளத்துக்கு, தோட்டங்களுக்கு செல்பவர்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுவதாகவும், அந்த பகுதிகளில் வேலைசெய்வோர்க்கு சிறிய அளவில் ஆஸ்த்மா வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.குளத்தை முழுவதும் சூழ்ந்து நிற்பதால் குடிநீருக்கும் ஆபத்து நேரிடுமா என்று அனைவரும் அஞ்சுகின்றனர்.
ஒரு கிலோமீட்டருக்கு மேலாக இவை பரந்து காணப்படுகின்றன. தற்போது கீழமணக்குடி செல்லும் மெயின்ரோட்டிலும் வளர ஆரம்பித்துள்ளது. விஷ செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








