நாடாளுமன்ற கட்டடத்தை திறக்கும் முன்பு நாலு வார்த்தை

0
286

நாடாளுமன்றம் என்பது நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் விளங்கும் இடமாகும். எனவே அங்கு நடக்கும் எந்த நிகழ்ச்சியும் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைவது அவசியம். அதிலும் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற திறப்பு விழாவை நாலு பேர் மதிக்கும் வகையில் நடத்துவது நல்லது.

பெரும்பான்மை மக்களால் புறக்கணிக்கப்பட்ட சாவர்க்கர் பிறந்த நாளில் கட்டடத்தை திறப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் குடியரசு தலைவரை வைத்து கட்டடத்தை திறக்காமல், ஆளுங்கட்சி என்றாலும் ஒரு கட்சியின் தலைவரான பிரதமரே திறப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு முன்பும் இவ்வாறு நடந்துள்ளது என்பதை விமர்சனத்துக்கு பதிலாக வைக்காமல், குடியரசு தலைவர் தலைமையில், பிரதமர் முன்னிலையில் விழாவை நடத்தலாம்.

இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. எனவே, எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக கருதாமல் அவற்றின் கருத்தையும் ஆலோசித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்ச்சி நிரலை தயாரித்து மகிழ்வுடன் திறப்பு விழா நடத்தினாலே ஜனநாயக மாண்பு பாதுகாக்கப்படும்.

அதுமட்டுமின்றி, தனிப்பட்ட புகாராக இல்லாமல் ஒட்டுமொத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கையாக இருக்கும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிட்ஜ் பூசன் சிங்கை கைது செய்வதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நன் மதிப்பை காப்பாற்றினால் திறப்பு விழாவின் சிறப்பு அதிகரிக்கும்.

இந்தியாவுக்கு பல விருதுகள் பெற்றுத் தந்த வீரர்கள் நாடாளுமன்றம் முன்பு கூடி போராடினால் அது இந்திய குடியரசுக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here