தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூயிஸ் பிரான்சிசை மணல் கொள்ளையர்கள் நேற்று முன்தினம் (26.
பட்டப்பகலில் அலுவலகம் புகுந்து வெட்டிக்கொன்றனர். இதன் பின்னணி குறித்து எழுத்தாளரும், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளருமான இதழாளர் அய்கோ தலைமையில் நேரில் சென்று கள ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் கலெக்டரிடம் தாங்கள் அறிந்த உண்மைகளை கோரிக்கை மனுவாக வழங்கினர்.

அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சில ஆண்டுகளாகவே முறப்பநாடு போலீசார் உதவியுடன் கலியாவூர், அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, ஆழிகுடி, செந்நெல்பட்டி, மருதூர் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் கொள்ளை நடந்துவந்தது. முறப்பநாடு போலீசார் கையூட்டு பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை ஊக்குவித்துள்ளனர். அதுமட்டுமல்ல, சிறப்பு பிரிவு போலீசாரும் மணல் கொள்ளையில் லஞ்சம் பெற்றுள்ளனர்.
கடந்த 13.4.2023ல் கிராம நிர்வாக அலுவலர் லூயிஸ் பிரான்சிஸ் புகாரின்பேரில் ராமசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை கைது செய்யாமல் சுதந்திரமாக விட்டுள்ளனர். அதற்காக போலீசாருக்கு ரூ.35,000 லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் உன்னை கைது செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறார் என்று லூயிஸ் பிரான்சிஸ் மீது பழியை போட்டுள்ளனர்.
அதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலகம் சென்று லூயிஸ் பிரான்சிஸை வெட்டிக்கொன்றுள்ளார்.

ராமசுப்பிரமணியத்தை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி, கொலை நடந்த கிராம நிர்வாக அலுவலகம் காவல் நிலையத்திலிருந்து நேரெதிரே சுமார் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. காவல் நிலையம் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்று சாவதானமாக கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்றுள்ளனர்.
எனவே, கிராம நிர்வாக அலுவலர் லூயிஸ் பிரான்சிஸ் கொலை வழக்கில் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ், சிறப்பு பிரிவு ஏட்டு மகாலிங்கம் ஆகியோரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களின் கைபேசிகளை கைப்பற்றி, அழைப்பு விவரங்களை பார்க்கவேண்டும். காவல் நிலைய காமிரா பதிவுகளை ஆய்வுசெய்யவேண்டும்.
அது மட்டுமின்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையில், அப்பகுதியில் மணல் கொள்ளை நடக்காமலிருக்க தனிப்படை அமைக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அய்கோவுடன் கலுங்குவிளை திருச்செல்வம், பால் அண்ணாதுரை, தூத்துக்குடி பூபாலன், கிருஷ்ணன், ஏரல் ஜெயபாலன், தச்சை மாசாணம், அருள்ராஜ், செல்வகுமார், ஜெயராணி, பொன் ராணி, ரீட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.











