பெத்தேல்புரம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஒரு சிறுமி தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வை கடந்த 20ஆம்தேதி உடல் வலியின் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தவித்துள்ளாள்.
இது குறித்து விசாரித்த ஆசிரியைகளிடம் தனிப்பயிற்சி மையம் (டியூஷன் சென்டர்) நடத்திவரும் தனது தாயின் தோழி கடுமையாக தாக்கியதாக கூறியுள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் தாயார் மற்றும் டியூஷன் டீச்சரான அவரது தோழியிடம் விசாரித்ததில், நன்றாக படிக்கும் அந்த சிறுமி, சில பாடங்களில் 100க்கு சற்று குறைவாக மதிப்பெண் எடுத்துள்ளார். காலாண்டு தேர்வில் 5 பாடங்களுக்கும் சேர்த்து ஒரு மதிப்பெண் கூட குறையாமல் 500/500 எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிறுமியை என்ன செய்தாலும் பரவாயில்லை என சிறுமியின் தாயார் டியூஷன் டீச்சரான தோழியிடம் கூறியுள்ளார். அதன் காரணமாகவே சிறுமியை இப்படி காட்டுமிராண்டித்தனமாக டியூஷன் டீச்சர் தாக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இது குறித்து வாட்ஸ் ஆப்களில் தகவல் கசிந்தும் இன்னமும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கல்வி முறை பெற்றோர் ஆசிரியரை அரக்கர்களாகவும், பிள்ளைகளை நிம்மதியிழந்தவர்களாகவும் ஆக்கிவைத்துள்ள கொடுமைக்கு முடிவுகட்ட இதுபோன்ற பிரச்னையை வழக்குப் பதிந்து முறையாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.








