நெல்லை தொகுதியில் கொதிக்கும் வெயிலோடு சேர்ந்து அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் அடிக்கிறது.
பொதுவாக வேட்பாளரின் தரம், அவர் சார்ந்த கட்சியின் நிலை, மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பங்களை சார்ந்து வாக்குகள் கிடைக்கும்.
அந்த அடிப்படையில் முதன்மையான வேட்பாளர்களின் தகுதி குறித்து ஆராய வேண்டியுள்ளது. மற்ற தொகுதிகளில் இருப்பது போல் இங்குள்ள வேட்பாளர்கள் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை. .
ஆனாலும், அவர்களின் பூர்வாசிரம குறைபாடுகளை ஒருவருக்கொருவர் கிண்டி கிளறி எடுத்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசுக்கு, தொகுதியில் உள்ள இரண்டரை லட்சம் கிறிஸ்தவர் வாக்குகளில் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலை. நயினார் நாகேந்திரனுக்கு அனைத்து சாதி மக்களிடமும் ‘சுமுகமான மனிதர்’ என்ற பெயர் இருப்பதால், பாஜக கட்சி வாக்குகளையும் தாண்டி அள்ளுவதற்கு வாய்ப்பு. அதிமுகவுக்கு ஏற்கனவே உள்ள வாக்குகளில் கொஞ்சம் அங்கும், இங்கும் போகும். எஸ் டி பி ஐ புதிய தமிழகம் போன்ற கூட்டணி கட்சிகளின் வாக்குகள் கூடுதலாக கிடைக்கும்.
அது தவிர, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் பெருமளவு கெட்ட பெயர் இன்றி களமாடி வருகின்றனர்.
ஆனாலும், முன்னிலை வகிக்கும் மூன்று கட்சிகளின் வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரை தேர்வு செய்யும் போது அவர்களுடைய நற்பெயரோடு, ‘ ‘மைனஸ் பாய்ண்ட்’களையும் நிச்சயம் மக்கள் அலசி ஆய்வார்கள் அல்லவா?
அந்த வகையில், ராபர்ட் புரூஸ் மீது, ‘சி எஸ் ஐ கிறிஸ்தவத்தின் ‘சினாடு’ நிர்வாக குழுவில் பொறுப்பேற்ற போது, லஞ்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக சிஎஸ்ஐ நிர்வாகத்தின் முன்னாள் நிர்வாகிகள் சிலரே சொல்லி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் லே செகரட்டரி வேதநாயகம், அந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுகவிற்கு வேலை பார்த்து வருகிறார் .
நயினார் நாகேந்திரன் அதிமுக அமைச்சராக இருந்தபோது, அரசுப் போக்குவரத்து கழக இடத்தில் ஓட்டல் அமைத்ததும் பெருமளவு பேசப்பட்டது. ஆனாலும் சட்டரீதியாக அதைப் பெரும் தவறாகக் கூற முடியாமல் போனதால் ,அந்தக் குத்தகை விவகாரம் முடிந்து விட்டது.
ஆனால், சமீபத்தில் அவரது மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த விவகாரத்தை எதிர் அணியினர் கையில் எடுத்துள்ளனர்.
திசையன்விளை பேரூராட்சி தலைவியாக இருந்த ஜான்சி ராணி, சாலை, குடிநீர் குழாய் அமைத்ததிலும், வீட்டுமனை அங்கீகாரத்திலும் லஞ்சம் பெற்று பணியாற்றியதால், பல வேலைகள் தரமற்றதாக உள்ளதாக அங்குள்ள காங்கிரசார் வெளியூர்களிலும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
என்னதான் ஆனாலும், மற்ற ஊர்களில் உள்ளது போல மிகப்பெரிய ஊழல் விவகாரம் இல்லாததால், நெல்லை தொகுதி வேட்பாளர்களின் தன்மையை விட, அவர்களின் சமூகம் படிப்பு, திறமை, கட்சி அடிப்படையிலேயே அவர்களுக்கு வாக்களிப்பது பற்றி வாக்காளர்கள் சிந்தித்து வருகின்றனர்.