தமிழ்நாட்டில் நதிக்கரை நாகரீகத்தை பிரதிபலிக்கும் வகையில் முதல் முன்முயற்சியாக நெல்லையில் பொருநை இலக்கிய விழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.
இந்த விழாவில், இதுவரை அறிமுகப்படுத்தப்படாத தேரிக்காட்டு இலக்கிய நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை கலைமாமணி விருது பெற்ற எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி நெறியாளுகை செய்தார். அப்போது, பனை மரத்தைப் பற்றி விளக்கிப் பேசினார். மேலும்,’ ‘தேரிக்காட்டின் கலை, இலக்கியம், வரலாறு தொடர்பான ஆவணங்களை தேடவும், சேகரிக்கவும் அரசு உதவி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அடுத்து பேசிய இதழாளர் அய்கோ, ‘தேரிக்காட்டு மண்ணே இலக்கியம் பேசும். அது இளகிய மண், இலக்கிய மண். அது ஒரு மர்மம் நிறைந்த ரகசிய பூமி. நிறைய வரலாறுகள் மண் மூடிக் கிடக்கின்றன.
பொழுதடைந்த நேரங்களில் நன்கு அறிந்தவர்களே தேரிக்காட்டுக்குள் சென்று திரும்புவது கடினம். ஒரு காலத்தில் தேரிப்பகுதி ஊர்களுக்குச் சென்றவர்களை காட்டை கடத்தி விடுவதற்கென்றே ஆட்கள் இருந்திருக்கின்றனர்.
1805ல் அங்கு வந்த கிறிஸ்தவ உபதேசியார் ஒருவர், நாசரேத்தில் தங்கி விட்டு அதிகாலை திரும்பும் போது தேரிக்காட்டை கடக்க பரஞ்சோதி உதவினார். இல்லையென்றால் திரும்பி வருவது கடினமாக இருந்திருக்கும் என்று தனது நாட்குறிப்பேட்டில் எழுதி உள்ளார்.
இது பெண்ணின் சாபம் வாங்கியதால் பாவ பூமி என்பதும் சரியல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதிக்காக போராடிய கற்குவேல் அய்யனாரின் நீதி பூமி.
அதேபோல் 1848 கலெக்டர் இ.பி. தாமஸ் வந்தபிறகுதான் இங்கு பனை வந்தது என்பது தவறு. பழைய காயல் துறைமுகத்திலிருந்து வாஸ்கோடகாமா மகன் மனுவல்காமா 1 பலம் 7 ரூபாய் என கருப்பட்டியை வாங்கி தன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தார் என்ற குறிப்பு உள்ளதால் அதற்கு முன்பே பனைத்தொழில் சிறந்து விளங்கியிருப்பது தெளிவாகிறது.
இங்குள்ள வழிபாட்டு முறையும் வித்தியாசமானது. பணிக்க நாடார் குடியிருப்பு அருகே பனையேறி பக்தனுக்கு தரிசனம் கொடுத்த பாதக்கரை சாமி, தன்னை அந்த இடத்தில் நிலையம் அமைத்து வணங்கச் சொல்கிறார். ‘நான் ஏழையாயிற்றே எப்படி கோயில் கட்டுவேன்?’என்று பனையேறி பக்தர் தயங்க, மூன்று ஓலைகளை நட்டு வணங்கு என்று எளிய முறையை கூறினார்.
செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகள் கோயிலிலும் ஏரல் சேர்மன் சாமி கோவிலிலும் திருமண் தான் பிரசாதம். அதனால் தானோ என்னவோ, தேரிக்காட்டுக்காரர்களுக்கு மண் பற்று அதிகம் இருக்கிறது. வறண்ட நிலத்தில் கடினமான வாழ்க்கை அவர்களுக்கு போராடும் மன தைரியத்தை கொடுக்கிறது.
பிற்கால பாண்டியர் குடும்ப நினைவாலயங்கள் தேரிக் காட்டில் உள்ளன. அதில் ஒன்று ஐவர் பாண்டியரின் மருமகனான சரிய குல பெருமாள் கோயில்.
ஆதிச்சநல்லூருக்கு முன்னதான நாகரிகமும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித குல வரலாறும் தேரிகாட்டில் உள்ளது. இதை அறிவதற்கு சாயர்புரம் மீன் பரத்தி ஓடையிலும் குதிரை மொழி தேரியிலும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், தேரி மக்களின் கலை, கலாச்சாரம் பற்றி பேசினார். தேரிக்காடு நெடுங்காலமாக மானவீரவள நாடாக இருந்ததனால் அங்குள்ள மக்களுக்கு மான, வீர உணர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும்’ என்றார்.
எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன், தேரிக்காட்டுக்குள் செல்பவர்கள் கொண்டு போகும் கொஞ்ச நீத்தண்ணியையும் வண்டுகட்டி மண்ணில் புதைத்து பாதுகாத்து தாகத்தை தீர்ப்பதை பற்றியும், பொதிமாட்டு வண்டியில் சரக்கை ஏற்றிக்கொண்டு கால் புதையும் தேரி மணலை கடும் வெயிலில் கடப்பதை பற்றியும் மனதுருக விவரித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா எழுத்தாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு, வட்டாட்சியர் கனகராஜ், துணை வட்டாட்சியர் நவாஸ், வருவாய் ஆய்வாளர் சுந்தர முருகன், நல்நூலகர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டனர்.














