நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோா் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கப்படாத நிலையிலும், வரும் நாள்களில் தொற்று பரவாமல் இருக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கடை வீதிகளில் வணிக மற்றும் வா்த்தக நிறுவன உரிமையாளா்களிடம் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றி கடைகளை திறக்கவும், வாடிக்கையாளா்களை அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஊழியா்கள் கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். ஆக, கோவை மாநகராட்சியில் முன்னறிவிப்பில்லாத கட்டாய கொரோனா தடுப்பூசி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது உறுதியாகியுள்ளது.











