கோவையில் இன்று இரவு 4 மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல தடை

0
832

தற்போது பரவி வரும் ஒமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோவையில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் இன்று நள்ளிரவு கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் சமீரன் அறிவித்துள்ளார். அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புத்தாண்டையொட்டி மாநகரில் உள்ள அவினாசி சாலை, காந்திபுரம் சாலை, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மக்கள் திரண்டு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி யாராவது கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறீர்களா? என்பதை கண்காணிப்பதற்காக போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகன போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.

இதுதவிர மாநகர் எல்லைகளில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

மாநகரில் உள்ள அவினாசி சாலை, வடகோவை, காந்திபுரம், 100 அடிரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள் இரவு நேரம் மூடப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


மாநகரில் போலீஸ் கமி‌ஷனர் தலைமையில் 4 போலீஸ் துணை கமி‌ஷனர்கள், 2 கூடுதல் துணை கமி‌ஷனர்கள், 13 உதவி கமி‌ஷனர்கள், 38 இன்ஸ்பெக்டர்கள், 172 உதவி மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த 522 போலீசார், 45 ஊர்க்காவல் படையினர் உள்பட 1,050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் புறநகர் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் கூடுதல் எஸ்.பிக்கள், டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 800-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here