மதுரை கே.கே.நகரில், சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் ,சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், ’தென் தமிழகத்திலுள்ள 19 மாவட்டங்களுக்கு குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த அலுவலகம் நேரடியாக இயங்கும். பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும்.
பாலியல் தொடர்பான புகார்கள் கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும், தற்போதுதான் அதிகமான அளவில் வருகின்றன. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படுகின்றன. குழந்தைகள் பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை பயன்படுத்தாத நிலை கடந்த 10 ஆண்டுகளாக இருந்தது.
கிராமப்புறங்களில் நடைபெறும் குழந்தைகள் திருமணம் குறித்து அறிந்தவர்கள் உடனடியாக தகவல் தர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன.’ என்றார்.














