சென்னை ஐ.சி.எஃப்-ன் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் லஞ்சம் வாங்கி கைதான விவகாரத்தில், மேலும் 4.28 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத் தொகையும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எஃப்பின் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் காத்பாலை, 50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சி.பி.ஐ கையும் களவுமாக பிடித்து நேற்று கைது செய்தது.
இந்த லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்ய உதவிய பெண் தொழில் அதிபர் உள்ளிட்ட 4 பேரையும் சி.பி.ஐ கைது செய்திருந்தது.

சென்னையில் இயங்கும் யுனிவர்சல் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர் அம்சா வேணுகோபால், ஐ.சி.எஃப்பின் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் ஆக காத்பால் இருக்கும் போது டெண்டர் விவகாரத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு சாதகமாக இருந்ததற்காக 5.89 கோடி ரூபாய் அளவிற்கு காத்பால் லஞ்சம் வாங்கியது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்தது.
பணியில் இருந்தபோது லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டால் மாட்டிக்கொள்வோம் என்று ஓய்வு பெற்றபின் தவணை முறையில் பெறுவதற்காக காத்பால் திட்டமிட்டிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற காத்பால், தனக்கான லஞ்சப் பணம் அனைத்தையும் தவணை முறையில் கொடுக்குமாறு பெண் தொழிலதிபர் அம்சா வேணுகோபாலிடம் தெரிவித்துள்ளார்.
அம்சா வேணுகோபால், தனது தொழில் பங்குதாரரான டெல்லியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவர் மூலம், டெல்லியில் உள்ள காத்பாலின் சகோதரரான சஞ்சய் காத்பாலிடம் பணத்தை சேர்க்கும் படி டெல்லியில் உள்ள மற்றொரு தொழில் பங்குதாரரான கேட்மால் ஜெயின் என்பவர் மூலம் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பணப் பரிவர்த்தனையை அறிந்த சி.பி.ஐ, லஞ்சப் பணம் கைமாற உதவிய பெண் தொழிலதிபர் அம்சா வேணுகோபால், ஓம் பிரகாஷ், கேட்மால் ஜெயின் மற்றும் காத்பாலின் சகோதரர் சஞ்சய் காத்பால் ஆகியோரை கைது செய்து டெல்லி மற்றும் சென்னையில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மற்றும் டெல்லி உட்பட 9 இடங்களில் சி.பி.ஐ முதல் நாள் நடத்திய சோதனையில் 2.75 கோடி பணமும் 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து இரண்டாவது நாள் நடத்தப்பட்ட சோதனையில் வைப்புத் தொகையாக 4.28 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்புத் தொகைதொகை ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், இரண்டு வங்கி லாக்கர்களின் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
வங்கி லாக்கர்களில் இருக்கும் சொத்து ஆவணங்களின் மதிப்பை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த டெண்டர் முறைகேட்டில் ஐ.சி.எஃப்பை சார்ந்த மற்ற அதிகாரிகள் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி வருவதாகவும் சி. பி. ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















