மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா பதவி சண்டை சட்டமன்ற காலக்கெடு முடிவதற்குள் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று சஞ்சய் ராவத் அடித்துக்கூறிய நிலையிலும், பாஜக அமைதியுடனேயே கருத்து தெரிவித்தது. அதுமட்டுமின்றி, சிவசேனாவுக்காக கதவு திறந்திருப்பதாக கூறியது.
ஆனாலும் அடங்காத சிவசேனா, ‘ மகாராஷ்டிராவில் நடப்பது குழப்பமல்ல, நீதி மற்றும் உரிமைக்கான போராட்டம்‘ என்று பிரகடனப்படுத்தியதோடு, ‘ பிரச்சினை தீரவேண்டுமென்றால் நிதின் கட்கரியை அனுப்புங்கள்’ என்று கட்சி பிரமுகர் கிஷோர் திவார் வழியாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கோரிக்கை விடுத்தது.
இதனால் சற்று எரிச்சலடைந்துள்ள பாஜகவும் வேறு அம்பை ஏவுவதற்கு முடிவெடுத்தது. அதையடுத்துதான் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ராணா, ‘ பாஜகவுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் சிவசேனா இரண்டாக உடையும். 25 எம்.எல்.ஏக்கள் பாஜகவை ஆதரிப்பர்’ என்று எச்சரித்துள்ளார்.
பாஜகவினர் பேச்சுக்கெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்ப்பை தெரிவித்த சிவசேனா, சுயேட்சை எம்.எல்.ஏ. பேச்சுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த சூழலில் தாங்கள் ஏதாவது சொன்னால் சிவசேனாவினர் கொந்தளித்துவிடுவர் என்பதால் பாஜகவினர் ரவி ராணாவை கருவியாக பயன்படுத்தியுள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.













