தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சார்பதிவாளர் அலுவலக இட மாற்றத்திற்கு எதிராக போராடிய சமூக சேவகர் குணசீலனை, நிலத்தரகரும் ஆளுங்கட்சி பிரமுகருமான அப்துல் ஹமீது என்பவர் சில நாட்களுக்கு முன்பு காரால் மோதிக்கொல்ல முயன்றார். இந்த குறித்து வழக்கு பதிவு செய்யவே தயங்கிய போலீசார், விசாரணையிலும் சுணக்கம் காட்டினர்.
சமூக ஆர்வலர்கள் கலெக்டர் மற்றும் முக்கிய காவல் அதிகாரிகளுக்கு மனு அளித்ததன் பின்பே, கொலை முயற்சி, வாகனத்தால் மோத முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்துல் ஹமீது குணசீலன் மீது மோத பயன்படுத்திய கார் அவருடையது அல்ல. விஜயலட்சுமி என்ற பெயருடைய யாரிடமிருந்தோ, ஸ்பீடு வட்டிக்காரர்கள் மூலம் காரை வாங்கி, சமூக சேவகரை கொல்வதற்கு என்றே சமீபகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இவ்வளவு திட்டமிட்டு செயல்பட்டதற்கு, கொலை சதி திட்டம் தீட்டும் பிரிவை கூட போலீசார் பயன்படுத்தவில்லை. மேலும் , அப்துல் ஹமீதுக்கு உரிமை இல்லாத, யாருடையதோ ஆன மர்ம காரை கைப்பற்றியோ, அந்தக் கார் பலாத்காரமாக வாங்கப்பட்டதா, ஏமாற்றிக் கொண்டுவரப்பட்டதா என்று கூட இதுவரை போலீசார் விசாரிக்கவில்லை.
பிணையில் வர முடியாத இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தும், ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால், அப்துல் ஹமீது மிக சுதந்திரமாக போலீஸ் நிலையத்திற்கு முன்பே கூட சுற்றுகிறார்.
எனவே, அப்துல் ஹமீதுவை கைது செய்தும், கொலை முயற்சிக்குப் பின்பும் சட்ட விரோதமாக அவர் பயன்படுத்தும் மர்ம காரை கைப்பற்றியும், கொலை முயற்சி பின்னணியில் உள்ள சதித்திட்டம் பற்றியும், உடந்தையாக யாரேனும் உள்ளனரா என்றும் விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.
.









