திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஏற்கனவே ஒரு போலி மருத்துவமனை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது புதுப்பாளையத்தில் மேலும் ஒரு மருத்துவமனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனையை மாவட்ட இணை இயக்குனர் சுகாதார நலப்பணிகள் .கண்ணகி, வட்டாட்சியர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் திடீரென ஆய்வு செய்தபோது, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை செயல்படுவது தெரியவந்தது.அனுமதி மசான்றிதழ் இல்லாமல் போலியாக மருத்துவமனை செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து அருகிலிருந்த மருந்தகத்தை ஆய்வு செய்தபோதும் உரிய சான்றிதழ் இல்லாமல் மருந்தகம் செயல்படுவதை கண்டறிந்தனர்.
இதற்கிடையே, சட்டவிரோதமாக செயல்படும் மருத்துவமனை மற்றும் மருந்தக உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென புதுப்பாளையம் காவல்நிலையத்தில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் தலைமறைவான போலி மருத்துவரையும் மற்றும் மருந்தக உரிமையாளரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.














