விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒ.மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன்(31). இவரது மனைவி செல்வி (26). இவர்களுக்கு அனுஷ்கா (5) என்ற மகளும், மாதேஸ் (2) என்ற மகனும் உள்ளனர்.
தீப்பெட்டி ஆலையில் கூலி வேலைபார்த்து வந்த சங்கரநாராயணன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, குடும்பப் பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்தபின்பு செல்வி தனது குழந்தைகளுடன், தனது தாய் வீட்டின் அருகில் வசித்து வந்தார். கடும் சோகத்திலும், மனஉளைச்சலிலும் இருந்த செல்வி, நேற்று தனது மகள் அனுஷ்கா, மகன் மாதேஷ் இருவரையும் அழைத்துக் கொண்டு, அதே ஊரில் காட்டுப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்துள்ளார்.
அந்தப்பக்கம் சென்றவர்கள் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சாத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் வந்து, கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட செல்வி, அனுஷ்கா, மாதேஷின் உடல்களை நீண்ட தேடுதலுக்குப்பின் மீட்டனர்.

மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















