தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்பச் சலனம் காரணமாக வட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.