விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று மாவட்டத்தில் புதியதாக 597 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 37,004ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனலிக்காமல் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. புறநகர் பகுதிகள், கிராமப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமம் இருந்து வருகிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் வெளியில் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கிராமப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை ஓரளவு குறைத்து, தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.
கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளிலும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், வரும் நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.