வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இயங்கும் 700 நடுமாடும் வாகனங்களின் மூலம் காய்கறிகள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பார்த்திபன் தலைமையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
இதில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்தகொண்டனர்.
இதன் பின்னர் வாணியர் வீதியில் ஜெயின் சங்கம் சார்பில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘ 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும் முகாமுக்கு இம்மாவட்டத்தில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 54 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் இதுவரையில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 915 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .
பொதுமக்கள் அரசு வழங்கும் இந்த இலவச தடுப்பூசியை போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் இதனை போட்டால் செத்து போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள் அது தவறானது நானே இரண்டு தடுப்பூசியை போட்டதால் தான் மீண்டும் என்னை கரோனா தாக்கிய போதும் உயிர் பிழைத்தேன்.
அமெரிக்கா, ரஷ்யா,சீனா போன்ற நாடுகள் கரோனாவுக்கு தடுப்பூசி போட்டுகொண்டதால் கரோனாவை அவர்கள் வெற்றிகொண்டுள்ளனர். ஆனால், இங்கே தவறான தகவலால் தடுப்பூசி போட்டுகொள்ள அஞ்சுகிறார்கள் தடுப்பூசி போட்டுகொண்டு உங்களையும் சமுதாயத்தையும் காத்துகொள்ளுங்கள்’
என்றார். இதன் பின்னர் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் 200 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ முகாமை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்..














