மதுரை நேருநகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தனது மினிவேன் மூலம் எல்லீஸ் நகர், ஆண்டாள்புரம், சுந்தர்ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார்.
அதேபோல் இன்றும் தனது வாகனத்தில் ஆண்டாள்புரம் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்துவிட்டு வீடு திரும்பியவரை அந்தபகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் முறையாக ஆவணங்களை காட்டியுள்ளார்.

அவற்றை சோதனை செய்தபின்னரும் அவருக்கு 500ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தன்னிடம் முறையாக ஆவணங்கள் இருந்தபோதிலும் அபராதம் விதித்தது குறித்து கேட்டுள்ளார். அதற்கு முறையாக எந்தவித பதிலும் அளிக்காமல் கார்த்திகேயனை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, ‘ தற்போது கொரோனா ஊராடங்கால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ள நிலையில், அவசர தேவைக்காக வீடுகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் லாப நோக்கம் இன்றி குடிநீர் சப்ளை செய்து வரும் நிலையில், போலீசார் விதித்துள்ள 500 ரூபாய் அபராதம் பெரும் இழப்பாகவே உள்ளது’என்றார்.
மேலும், மனஉளைச்சல் அடைந்த கார்த்திகேயன் தனது இயலாமை குறித்து வாட்ஸ்அப்பில் ஆடியோவாக பகிர்ந்துள்ளார்.
இதேபோல், மருந்து வாங்கச்சென்ற காயல்பட்டினம் மருந்துக்கடைக்காரரை வழிமறித்து நெல்லை போலீசார் தொல்லை கொடுத்ததும் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. அத்தியாவசிய பணி செய்வோர், முன்களப்பணியாளர்களை போலீசார் கண்ணியமாக நடத்தினால் அவர்கள் படும் கஷ்டத்தை மீறிய விமர்சனம் எழாது.