ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் – அட்லி – ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை – ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு – ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் – விவேக், படத்தொகுப்பு – ரூபன் எல். ஆண்டனி, கலை – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிகில் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த மாதம் பிகில் படம் குறித்த ஏராளமான செய்திகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தீபாவளி பண்டிகைகளுக்கும் விஜய் நடித்த மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் வெளியான நிலையில் இந்தத் தீபாவளிக்கும் விஜய் நடித்துள்ள படம் வெளியாகவுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தீபாவளியன்று வெளியாகும் விஜய்யின் படங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதன் பட்டியல்:
2011 – வேலாயுதம்
2012 – துப்பாக்கி
2014 – கத்தி
2017 – மெர்சல்
2018 – சர்கார்
2019 – பிகில்
இந்த ஐந்து படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் பிகில் படத்தின் வெற்றியும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.