திருநெல்வேலி மாவட்டம் உவரி யில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமிகள் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலை ராதா கிருஷ்ணன் என்பவர் பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார். இவருக்கும் பழைய குருக்களுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது.
இதில்,ராதாகிருஷ்ணன் தரப்பினர் பழைய குருக்களை கோவிலில் இருந்து அகற்ற உத்தரவு வாங்கியதாக கூறி, இன்று காலை அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் வந்து அவர்களை வெளியேற்ற முயன்றனர். புதிதாக இரு குருக்களை பணியாமர்த்தவும் முயற்சி செய்தனர்.
இதனால் பழைய குருக்கள் 20க்கும் மேற்பட்டோர் வெளியேற மறுத்தும், புதிய இரு குருக்களை உள்ளே நுழைய அனுமதிக்காமல் தடுத்தும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து பழைய குருக்களை வெளியேற்றி புதிய குருக்களை பணியில் அமர்த்த உதவினர்.

இச்செயலை கண்டித்து குருக்களுக்கு ஆதரவாக உவரி ஊராட்சி தலைவர் ஆறுமுக ராஜன், முன்னாள் தலைவர் ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கேசவன் ஆகியோர் திரண்டனர். நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.








