புதிய ஊரடங்கு சிக்கல்கள்

0
1080

குரூரமாக தாக்கும் கொரோனாவின் இரண்டாம் சுற்று ஆட்டத்தால் ஊரடங்கு, தடுப்பு மருந்து, தற்காப்பு மிகுந்த அவசியம் என்றாலும்,இரு வாரங்களுக்கு நீடிக்கப் போகும் புதிய ஊரடங்கு காரணமாக பெரும்பான்மை மக்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

முதலில் தடுப்பு மருந்து நடவடிக்கையை இந்த காலகட்டத்தில் தீவிரமாக முடுக்க வேண்டும். தடுப்பூசி மட்டுமல்லாமல், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கும் தாங்கல்கள் ஆங்காங்கே அமைக்கப்படவேண்டும்.

அலோபதி மருந்து கம்பெனிகளுக்கு ஆதரவாக மரபார்ந்த மருத்துவ முறைகளை இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆனால், ஆப்ரிக்க நாடுகளில் பரம்பரை மருத்துவம் மூலமாக கொரோனா விரட்டப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்திலும் இதுபோன்ற விடக் காய்ச்சல்களை விரட்ட மருந்து உள்ளது. சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சலை சித்த மருந்துகள் மூலமே குணமாக்கியதை நினைவு கூரலாம். இக்காலகட்டத்தில் கொரோனாவுக்கு என மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தயாரித்த 60 மருந்துகள் அடங்கிய கொரோனா நிவாரணியை அரசு மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

துறைவாரியாக ஆராய்ந்து அந்தந்த பிரிவு மக்களுக்கேற்ப நிவாரணம் நிதியாகவோ, வேலை சலுகையாகவோ அளிக்கப்படவேண்டும். தனியார் வாகனங்கள் இயங்க தடை இருப்பதால் வாடகை வாகன ஓட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தனியார் நிறுவனங்கள் இயங்க தடையுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

கட்டுமானத்தொழில், சிறு வணிகம் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் அவற்றை கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம். நடந்துவரும் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி என்பது ஆறுதல் அளித்தாலும், அதற்கும் புதிய வேலைகளுக்கும் வேறுபாடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் கடைகளை திறக்க அனுமதிப்பது நல்லது, ஆனாலும், அதை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறப்பதால் நெருக்கடி நேர வாய்ப்புள்ளது. கூடுதல் 2 அல்லது 3 மணி நேரம் ஒதுக்கலாம் என்பதே காய்கறிக் கடைக்காரர்கள் கோரிக்கையாக உள்ளது.

மதுக்கடைகள் மூடப்படும் என்பது மட்டும் பெரும் ஆறுதல். இல்லாவிட்டால், இருக்கும் கொஞ்சநஞ்ச காசையும் வீட்டிலிருந்து கொண்டுசென்று அங்கு கொட்டிவிட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here