பிரபல ரவுடியை திண்டுக்கல் சிறைக்கு மாற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

0
1156

மதுரை, காமராஜபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி  காளிமுத்து (எ) வெள்ளை காளி மனைவி திவ்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

“எனது கணவரின் உடன்பிறந்த அண்ணன் சின்னமுனுசு என்பவரை கடந்த 2004ஆம் வருடம் வி.கே.குருசாமி என்பவரும் அவரது ஆட்களும் சேர்ந்து கொலை செய்தனர். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பிலும் பல வழக்குகள் மதுரை மாநகர காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டது.

இவற்றில் பல வழக்குகளில் எனது கணவரையும் பொய்யாக சேர்த்து காவல்துறையினர் பதிந்துள்ளனர். இதனால் எனது கணவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் 2020-ல் தென்காசி குற்றாலத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் எனது கணவர் வெள்ளை காளியை கைது செய்து அவரது வலது கணுக்காலை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர்.

கடந்த 1-1/2 வருடங்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக திருச்சி மத்திய சிறையில் எனது கணவர் இருந்து வருகிறார்.

எனது கணவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் மதுரை நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதால் வழக்கின் வாய்தாவிற்கு அடிக்கடி எனது கணவரை திருச்சி மத்திய சிறையிலிருந்து மதுரைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வருகின்றனர். நானும் எனது ஒரு வயது பெண் குழந்தையும் இங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு சென்று எனது கணவரை பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது எனவே எனது கணவரை திருச்சி மத்திய சிறையில் இருந்து திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு மாற்ற உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “

குற்றவாளி மீது 8 கொலை வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகள் உள்ளன . எனவே, குற்றவாளிக்கு திண்டுக்கல் மாவட்ட சிறைசாலையில் போதிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here