முத்திரை பதிக்காத ஸ்டாலின் ஆட்சி கட்சியினருக்கு அதிர்ச்சி

0
1591

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு புதுமையை முதல்வர் முக ஸ்டாலின் கடைப்பிடித்து வருகிறார். தலைமை செயலகத்தில் நுழைந்தபோதே அதற்கு அச்சாரம் பதித்துவிட்டார். தன்னை வரவேற்கும் பொருட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி மற்றும் தனது படத்தை உடனே அகற்ற உத்தரவிட்டார். ஆட்சி வேறு, அரசியல் வேறு என்று பிரித்துப்பார்க்கும் முதிர்ச்சி அப்போதே அவர் செயலில் புலப்பட்டது.

தற்போது கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்திலும் தனது பெயர், படம் எதையும் அவர் பதிக்கவில்லை. பை ஒன்றில் 12 குடிமைப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் அவரது பெயர், படம் இல்லை. அதுமட்டுமல்ல, கொரோனா நிதி நிவாரணம் வழங்கிய நிகழ்ச்சியிலும் எவ்வித பேனர், படம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். இதை அரசியல் வல்லுநர்கள் வரவேற்கின்றனர்.

ஆனால், கொடி, பேனர், தோரணம் என்று வாழ்ந்து பழக்கப்பட்ட அவரது சகாக்களால் இதை செரிக்க முடியவில்லை. வட்டியும் முதலுமாக, குடிமை பொருள் வழங்கும் ரேஷன் கடைகளில் பேனர் கட்டி, கொடி கட்டி திமுக விழாவாக நடத்த முயல்கின்றனர். அதில் அச்சிடப்பட்ட வாசகங்கள் கூட, ஏதோ மக்களுக்கு திமுகவினர் தாராளம் காட்டுவதுபோல் உள்ளன. ரேஷன் கடை ஊழியர்களின் பண விநியோகம் தடைப்படும் அளவுக்கு அவர்களின் தடபுடல் இருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள் என்பதை தலைவர் உணர்ந்தும் வால் தறிகெட்டு ஆடுவதாக மூத்தோர்கள் பெருமூச்சு விடுகின்றனர். அரசுத்திட்டங்களை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தொடங்கிவைக்கலாம், ஆனால், கட்சி பொறுப்பாளராக அல்லாமல், மக்கள் பிரதிநிதியாக சென்று தொடங்கிவைக்கவேண்டும்.

மாறாக, இப்போது சில இடங்களில் செய்ததுபோல், திமுக கட்சிக்கொடி, பேனர், கட்சி பொறுப்பாளர்கள் படத்துடன் விளம்பரம் செய்து தொடங்கினால் பழைய திருடி, கதவை திறடி கதையாகிவிடும்.

இதை தட்டிவைக்காவிட்டால் பழைய ஆடம்பர, ராஜ தோரணை அரசியல் செய்து மறுபடியும் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் உடன்பிறப்புகள் வனவாசம் அனுப்பிவைத்துவிடுவார்கள் என்பதை உணர்ந்து இந்த அடாத செயல்களுக்கு அடிமட்டத்திலேயே ஸ்டாலின் தடை போடவேண்டும். புதிய ஆட்சியில் கடைப்பிடிக்கப்படும் புதுமை நடவடிக்கை ஆட்சிக்காலம் முழுவதும் தொடரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here