பத்திரிகைகளில் பணம் வாங்கி விளம்பரம் போடுவது தவிர்க்க முடியாதது. விளம்பரங்களில் வரும் தகவல்கள் அவர்களின் சொந்த பொறுப்பு என்பதால் அதை வாசகர்கள் பெரிதுபடுத்துவது இல்லை.
ஆனால், பணம் வாங்கி செய்தி போடும் பழக்கம் இப்போது பரவி வருகிறது. குறிப்பாக, தேர்தல் காலத்தில் தினமும் இந்த பக்கத்தில் இந்தளவு செய்தி, படம் போட இவ்வளவு என நிர்ணயித்து வாங்குகின்றனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் 15 நாட்களுக்கு 7 முதல் 10 லட்சம் வரை இவ்வாறு பேக்கேஜ் செய்திக்கு கட்டணம் வழங்கியுள்ளனர்.
இதை பணம் கொடுக்கும் வேட்பாளர்களும் வெளியில் சொல்வதில்லை. பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்கள் செய்யும் தவறுகளை மறைக்கிறார்கள். பொய்யான தகவல் களை வெளியிடுகின்றனர்.
பெய்டு நியூஸ் கலாச்சாரம் பேக்கேஜ் செய்தியாக பத்திரிகைகளில் தொடங்கி, இப்போது ஊடகங்களையும் பீடித்துள்ளது. இத்தனை நிமிட செய்திக்கு இவ்வளவு என அவர்களும் பேரம் பேசத் தொடங்கிவிட்டனர்.
இவ்வாறாக, ஒருவரை ஆதரிக்க பணம் வாங்குபவர்கள், அடுத்த கட்டமாக, கூடுதலாக சில லட்சங்களை வாங்கிக்கொண்டு எதிர் வேட்பாளர்களைப் பற்றி அவதூறு பரப்பவும் தொடங்குகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக விளம்பரங்கள் தராத கட்சிகளையும், தலைவர்களையும் ஒதுக்குவதும் நடக்கிறது.
சென்னை போன்ற முக்கிய நகரங்களில், கட்சி தலைமை சார்பில் கோடிகளில் பேசி முடிவு செய்யப்படும் அளவுக்கு இந்த பேக்கேஜ் செய்தி கேவலம் தொடர்ந்துள்ளது.
இதனால் செய்தி சேகரிக்கும் நிருபர், புகைப்படக் கலைஞர் யாரும் பலன் பெறுவதில்லை. தலைமை நிருபர், நிர்வாகிக்கு குறிப்பிட்ட பெர்சண்டேஜ் கிடைக்கிறது.
சிறிய கட்சிகள், அமைப்புகள், சுயேட்சை வேட்பாளர்கள் பற்றிய எந்த விவரமும் பத்திரிகை, ஊடகங்களில் வெளிவராது. இந்த பேக்கேஜின் உச்சகட்ட வளர்ச்சியாக தகுதியற்ற, கிரிமினல் குற்றவாளிகள் பற்றி உண்மைக்கு மாறான நல்ல தகவலக்ளை மட்டும் அளித்து அவர்களை பெருமைப்படுத்துகின்றனர்.
இந்த சீர்கேடு தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்பட்டும் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை. வாசகர்கள் பிரபல ஏடுகளையும், நேயர்கள் பிரபல தொலைக்காட்சிகளையும் புறக்கணிக்க வேண்டிய தருணம் இது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.













