தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகம் நடைமுறையில் உள்ள மொய் விருந்து நிகழ்வு தற்போது மெல்ல தென் மாவட்டங்களில் கால் பதிக்க துவங்கியுள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மொய் விருந்து நிகழ்வு நடைமுறையில் உள்ளது. அப்பகுதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்த மொய் விருந்து நிகழ்ச்சியை நடத்துவர். இதில் நபரின் உற்றார் உறவினர் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பணத்தை மொய்யாக எழுதுவர். அதில் கிடைக்கும் தொகையை கொண்டு மொய் விருந்து நடத்தியவர் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பர். தற்போது நடைபெறும் மொய் விருந்துகளில் பல கோடி ரூபாய் புரள்கிறது.
ஆனால், நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இது போன்ற மொய் விருந்து நிகழ்ச்சி நடைமுறையில் இல்லை. அதே வேளையில் திருமணம் பூப்பு நீராட்டு விழாக்களில் உறவினர்கள் கலந்து கொண் மொய் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள புனித சூசையப்பர் திருத்தல கட்டுமான பணிக்காக மாபெரும் மொய் விருந்து நாளை நடக்கிறது. இந்த விருந்தில் மட்டன் கறி, எலும்பு குழம்பு, குடல் பொரியல் சிக்கன் வறுவல் உள்ளிட்ட அசைவ உணவு வகைகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் முதல் மொய் விருந்தாக இந்த நிகழ்வு அறியப்படுகிறது. இனி இது போன்ற நிகழ்வுகளுக்கு இது துவக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
க.அலெக்ஸ்











