தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், பொது முடக்கத்தை மீறி கடை நடத்தியதாக வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்து சென்று தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி கொலை வழக்காக மாற்றி ,அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 போலீஸாரை கைது செய்தனர்.
வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றத்தில தாக்கல் செய்து விட்டனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இன்று சிபிஐ அதிகாரிகள் பேய்க்குளத்தை சேர்ந்த ராஜசிங் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து இரு கார்களில் சாத்தான்குளம் வந்து, சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினர்.
அரசு மருத்துவரிடம் விசாரணை நடத்தியபோது செவிலியர்கள், ஊழியர்களை வெளியேற்றினர். ஜெயராஜ், பென்னிக்ஸை போலீஸார் விசாரித்தது தொடர்பான ஆவணங்களையும், தங்கள் கையில் வைத்திருந்த ஆவணங்களையும் சரிபார்த்தனர்.
விசாரணை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.













