பழகை நல்லூர் சிவன் கோயிலில் பரமனுக்கு பணிவிடை புரிந்த 61 பட்டர்களில் ஒருவரான சிவசாமியின் மகன் வேலவன். அவ்வூரில் இருந்த 41 தாசிகளில் ஒருத்தியான சிவகாமியின் மகள் லட்சுமி, ஆருத்ரா தரிசனத்தின்போது ஆடிய ஆட்டத்தால் அசந்துபோன வேலவன், அவளை காதலிக்கிறான். இதையறிந்த தாசி சிவகாமி அவனுக்கு உணவில் வசிய மருந்தை கலந்து கொடுத்து வீட்டோடு மயக்கிப் போடுகிறாள்.
வீடு, வாசல், பொன், பொருளையெல்லாம் விற்றுச் செலவழித்த வேலவன், கோயில் நகைகளையும் கொள்ளையடித்து இசக்கியின் கொள்ளையழகுக்கு காணிக்கையாக்குகிறான். வெறுங்கையனானதும் அவனை வீட்டை விட்டு துரத்துகிறாள் தாசி சிவகாமி. வெளியேற்றப்பட்ட வேலவன் வெறியேறப் பெற்றவனாக வனாந்தரத்தில் சஞ்சரிக்கின்றான். தாயைப் போலன்றி, உண்மைக் காதலுக்கு உயிரையும் கொடுக்க தயங்காத லட்சுமி வேலவனை தேடி காட்டுக்குள் செல்கிறாள்.
நடுக்காட்டில் காதலனை கண்டு சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைக்கிறாள். அவன் மறுக்கிறான். கோயில் நகை திருடிய தன்னை மன்னன் தண்டிப்பான் என்ற அச்சமும், அனைத்துக்கும் இவள் தானே காரணம் என்ற ஆத்திரமும் அவனை வஞ்சம் கொள்ளச் செய்கிறது.
இருவரும் ஒரு பெரிய கள்ளி மரத்தடியில் ஓய்வெடுக்கிறார்கள். லட்சுமி அயர்ந்து தூங்கியதும் மடியில் வைத்திருந்த அவள் தலையை அருகில் மண்கூட்டி வைத்துவிட்டு, சத்தமின்றி நடந்துசென்று அருகில் உள்ள பாறாங்கல்லை எடுத்து அவள் தலையில் போட்டுக் கொல்கிறான் வேலவன்.
ஆனால், வினை விதைத்த அவன் வினையை அறுக்கிறான். தாகம் தணிக்க காட்டுக் கிணற்றுக்கு சென்றபோது, கிணற்றடிக் கல்லின்கீழ் இருந்த நாகம் தீண்டி நஞ்சூறி சாகிறான். லட்சுமியின் அன்பு சகோதரனான நட்டுவன் நீலகண்டன் வீட்டில் தங்கையை காணாமல் காட்டுக்கு தேடி வருகிறான். அங்கு அவள் இறந்துகிடந்த கோலத்தை கண்டு தூக்கிட்டு மடிகிறான்.
ஈசன் நிழலையடையும் லட்சுமி காதலித்து துரோகம் செய்த வேதியனை பழிவாங்க மற்றொரு பிறவி வேண்டிப் பெறுகிறாள். அவ்வாறே அவளும் அண்ணனும் நீலன், நீலி என சோழ ராசருக்குக் குழந்தைகளாகப் பிறந்தனர். இக்குழந்தைகளுக்கு பசியாற தாய்ப்பால் போதுமானதாக இல்லை.
எனவே, ஊர் உறங்கியதும் இருவரும் தொட்டிலை விட்டிறங்கி வெளியே சென்று ஆடுகளையும், மாடுகளையும் கடித்து ரத்தம் குடித்துப் பசியாற்றிக்கொண்டு திரும்ப வந்து படுத்துக் கொண்டனர்.
மறுநாள் காலை குழந்தைகள் மேல் ரத்த வாடை வீசுவதைக் கண்டு மகாராணி அதிர்ச்சியடைந்தாள். இதற்கிடையே சோழராசர் தலைமை சோதிடரை வரவழைத்து கணித்தபோது குழந்தைகளின் சாதகமும் பாதகமாக இருந்தது. சோதிடர்,
‘அரசே… இக்குழந்தைகள் மானுடக் குழந்தைகள் அல்ல… இவர்களால் கோட்டைக்கு ஆபத்து. எனவே இவர்களை காட்டில் விட்டு விடுங்கள்’ என்றார்.
பெற்ற பிள்ளைகளைக் காட்டுக்குள் கொண்டு விட மன்னன் மனம் ஒப்பவில்லை. ஆனாலும், திடீர், திடீரென்று ஆடு, மாடுகள் காணாமல் போவதைப் பற்றிய தகவல்கள் சேவகர்கள் மூலம் மன்னரின் செவியை அடைந்தன. ஒற்றர்களை ஏவி உண்மையறிய சொன்னபோது, இரு குழந்தைகளும் ஆடு, மாடுகளை அடித்து தின்று விட்டு அரண்மனைக்கு திரும்பிச் செல்வதைக் கண்டனர்.
இதையறிந்ததும் வேறு வழியின்றி, இரு குழந்தைகளையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிட உத்தரவிட்டார்.
காட்டில் இரு குழந்தைகளும் ஓர் வேப்ப மரத்தில் குடியிருந்தவாறே விலங்குகளை வேட்டையாடி தின்று வாழ்ந்தன. ஒரு நாள் நீலி மட்டும் வேட்டைக்கு சென்றபோது பக்கத்து ஊரில் வாழ்ந்துவந்த வேளாளர்கள் ஆலயத்தின் கதவுக்காக நீலன் குடியிருந்த வேப்ப மரத்தை வெட்டிஎடுத்துச் சென்றனர். இதையடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாம் பழகைநல்லூர் நீலிக்கதையில் நடந்தவைதான்.
அவ்வாறே, வணிகனாக மறுபிறவியெடுத்த காதலைனை பழிதீர்த்த நீலி, ஆவேசம் அடங்காமல் அங்குமிங்கும் அலைந்து இறுதியாக முப்பந்தலில் நிலையம் கொண்டாள்.
நீலியாக காட்டில் அலைந்த இசக்கி பலரையும் பயமுறுத்தினாள். அவளின் உருவம் கண்டு நடுங்கி பலரும் உயிரை விட்டுள்ளனர். காட்டு வழியாக வருவோரிடம் சுண்ணாம்பு கேட்பாள் நீலி. அவர்கள் சுண்ணாம்பை கத்தியில் வைத்துக் கொடுத்தால் அவள் வாங்கமாட்டாள். கத்தி இரும்பல்லவா? பஞ்சாயத்தில் காதலனை கணவன் என்று கூறி ஒரே அறையில் தங்கவைத்தபோதும், அவனது மந்திர கத்தியை பிடுங்குமாறு பஞ்சாயத்தாரிடம் முறையிட்டவள் அல்லவா?
நீலி பேயாக அலைந்தபோது ஒருமுறை ஒரு மந்திரவாதி அவளது தலையில் ஆணியை அறைந்து வீட்டுக்கு கொண்டுபோனான். அங்கு மந்திரவாதி மனைவியிடம் நைச்சியமாக பழகினாள். ஒருநாள் மந்திரவாதியின் மனைவி நீலி தலையில் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்த போது ஆணியைப் பார்த்து அவளிடம் சொல்ல, நீலியும் அதை எடுத்து விடுமாறு கெஞ்சினாள். ஆணியை எடுத்ததும் அங்கிருந்து தப்பித்து மீண்டும் காட்டுக்கு ஓடிவிட்டாள் என்பார்கள்.
பழவூரிலிருந்து மேற்கு நோக்கி இசக்கி சென்றதாக கூறப்படுகிறது. அப்படி சென்று கள்ளிக்காட்டில் தங்கினாள் என்பர். அவ்வாறு தங்கிய கள்ளியங்காடு நாகர்கோவில் அருகே இன்றும் உள்ளது. அருகில் இருந்த நாஞ்சில் நாட்டு வேளாளரே வேலவன் தங்கிய வேம்பை வெட்டிச்சென்றவர்களாக இருக்கலாம் என்பார்கள்.
இன்னுமொரு வரலாறு கலந்த புனைகதையும் உள்ளது. காதலைனை பழிதீரத்துவிட்டு இசக்கி முப்பந்தலுக்கு வந்தபோதுதான் ஔவையார் அங்கு மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ஆவேசத்துடன் வந்த இசக்கியை ஔவை ஆசுவாசப்படுத்தி அங்கேயே இருக்குமாறு கூறினார் என்ற கதையே அது.
முப்பந்தலில் இசக்கியம்மன் ஆலயம் அருகே ஔவையாரம்மனுக்கும், இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனித்தனி சன்னிதி அமைந்துள்ளது. சக்தியே இசக்கி, திருமாலே நீலகண்டனான நீலன் என்பாரும் உளர்.
கருவறையில் எல்லா அம்மனைப் போல இசக்கியம்மனும் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி உருவங்கள் உள்ளன.
கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும் உள்ளனர். முகப்பில் சுடலைமாடனுக்கும், அவருக்கு எதிரில் பட்டவராயருக்கும் தனி சன்னிதி உள்ளது.
இந்த கோயிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயில் கருவறை முன் மண்டபத்தில் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. அவளையே ஆதி இசக்கி என்கிறார்கள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய சிலை உள்ளது. இதில் அவள் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளாள்.
இசக்கியை சிலப்பதிகாரத்தில் காணும் யட்சி என்ற சமணத் தெய்வமமாக கருதுவோருண்டு. அதில் இளங்கோவடிகள் இடையர்குலப் பெண் மாதரியை,
‘அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதிரி என்போள்’
என அறிமுகப்படுத்துகிறார். அதாவது மாதரி இசக்கிக்கு பால் சோறு படைத்து வணங்கியதாக பொருள்.
ச(அ)மணர் தெய்வமான சாத்தனின் (நமது சாஸ்தாக்களின் மூலவர்) பணியாளர்கள் சங்கிலி பூதத்தார், இசக்கி என இருவர் இருந்ததாக கூறுவார்கள். 18 தேவ கணங்களான தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், நாகர், பூதத்தார், வேதாளர், தாராகணத்தார், ஆகாசவாசி, போகபூமியார், இயக்கர், ராட்சதர், சித்தர், சாரணர், வித்யாதரர் ஆகியவர்களில் ஒருவரான இயக்கியரின் பெண்பாலே இயக்கியென்றும் சொல்வார்கள். அறுபத்தி நான்கு இயக்கியர் இருப்பதாக திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
இயக்கி இருக்கட்டும், சமணர்களின் யட்சி கதைதான் என்ன?
சோம சர்மா என்றொரு பிராமணனின் மனைவிதான் அக்னிலா. ஒரு நாள் சோம சர்மா சில பிராமணர்களை விருந்துண்ண அழைத்திருந்தான்.
அவர்கள் வருமுன்பு இரு சமண முனிவர்கள் வீட்டுப் பக்கம் வந்தனர். போதிய அளவு உணவு இருந்ததால் அக்னிலா அவர்களுக்கும் உணவு பரிமாறினாள்.
அதன்பின்பு விருந்துண்ண வந்த பிராமணர்கள் இதை கேள்விப்பட்டு, ‘ சமணர்கள் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிடமாட்டோம்’ எனக்கூறி கோபத்துடன் வெளியேறினர். தனது விருந்தினர்கள் அவமதிக்கப்பட்டதாக கருதிய சோமசர்மா, மனைவி அக்னிலாவையும் மகன்களையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான்.
காட்டுக்குப் போன அக்னிலாவை கடவுள்கள் காப்பாற்றினர். காலம் செல்லச்செல்ல சோமசர்மாவுக்கும் தவறு உறைத்தது. மனைவி அக்னிலாவை சந்தித்து மன்னிப்பு கேட்க காட்டுக்கு சென்றான்.
தன் கணவன் தூரத்தில் வருவதை பார்த்த அக்னிலா, அவன் தன்னைத் தாக்கத்தான் வருகிறான் என்று எண்ணி அஞ்சி, மலை முகட்டிலிருந்து கீழே குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டாள். ஆனால், நல்வினையால் அவள் ஒரு யட்சியாகப் பிறந்தாள். அந்த யட்சிதான் அம்பிகா.
மனைவி தன்னை தவறாகப் புரிந்துகொண்டு தன்னையே மாய்த்துக்கொண்டதால் வருத்தமடைந்த சோமசர்மா, சிறிது காலத்திலேயே இறந்துபோனான். இறந்தபின் அவன் ஒரு சிங்கமாகப் பிறந்தான். அம்பிகா யட்சி அந்த சிங்கத்தைத் தனது வாகனமாக்கிக் கொண்டாள்.
அம்பிகா யட்சி மூன்று கண்கள், தலையைச் சுற்றி அக்னிப் பிழம்புகளுடன் சிங்க வாகனத்தில் வீற்றிருந்து காளியாகவே காட்சி தருகிறாள்.
யட்சியோ, இயக்கியோ தென் தமிழகத்தில் மனதுக்கு இசைந்த இசக்கியாகவே அவள் கோயில் கொண்டுள்ளாள். அவளைப்பற்றிய அச்ச உணர்வு இன்னும் நம்மவர்களின் அடிநெஞ்சில் உறைந்திருக்கிறது.
இரவில் தனிமையில் வருவோரை அவள் பின் தொடர்வதாகவே இன்றளவும் உணர்கிறார்கள். இதனால் அவளுக்கு படைத்த பிரசாதத்தைக் கூட யாரும் பெற்றுக் கொள்வதில்லை. அதன் மூலம் இசக்கி பின் தொடர்வாள் என்ற அச்சமே அதற்கு காரணம்.
நிறை சூலியையோ, மாத விலக்கான கன்னியையோ இசக்கி அம்மன் பின் தொடர்ந்தால் இறப்பு நிகழ்ந்துவிடும் என்ற அச்சமுண்டு. அவ்வாறு இறக்கும் பெண் குடும்பத் தெய்வமாக வழிபடப் பட்டு நாளடைவில் இசக்கியம்மனாகவே மாறிவிடுவார்கள். ஆனாலும், பிள்ளை இல்லாக் குறையைத் தீர்ப்பவள் இசக்கியம்மன் என்ற நம்பிக்கை பெரிதும் உள்ளது. அந்த குறையை போக்க கோயில்களில் மரத்தொட்டில் கட்டுவார்கள்.
பலவித இசக்கியம்மன்கள் தென்ன்னகத்தில் இருக்கிறார்கள். தென்காசி அருகே வண்ணாரத்தி இசக்கி உண்டு. காதலித்த உயர்குலத்தவனுடன் உயிர் நீத்த வண்ணாரப்பெண்ணே அவள். கன்னியாகுமரி மாவட்டம் பிளவுக்கல்லில் இருக்கும் இசக்கி அம்மன் இருதாரத்து மக்களின் சொத்து பாகப் பிரிவினைக்காக பாறையை பிளந்து வெளிப்பட்டாள் என்று கதைப்பாடல் கூறுகிறது.
எள்ளைப் பிளந்தது போல் துல்லியமாக நியாயம் சொன்னார் என்பார்கள். இங்குள்ள இசக்கியம்மன் கல்லைப்பிளந்து நீதி கூறியவள்.
ஒருவருக்கு தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் சொத்தை எப்படி பிரிப்பது என்று தெரியவில்லை. காரணம் அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு ஒரு மகனும் இளையவளுக்கு இரண்டு மகன்களும் இருந்தனர். ஆனால், மூத்தவள் சொத்தை பாதியாக பிரித்து தன் ஒரே மகனுக்கு தருமாறு கோரினாள்.
குழம்பிப்போன குடும்ப தலைவர் இசக்கி அம்மனை நினைத்தவாறே படுக்கச்சென்றார். இரவில் அவரது கனவில் வந்த இசக்கியம்மன், கோவில் அருகே முழுதாக இருக்கும் பாறையை காலையில் சென்று பார் என்று கூறினாள்.
எங்கு சென்று பர்த்தால், பாறை 1/3 அளவிலும் 2/3 அளவிலும் பிளவு பட்டு இருந்தது. அம்மன் ஆணைப் படியே பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்துக்கொடுத்தார் அந்த குடும்பத் தலைவர்.
அதே மாவட்டத்தில் பெருமாள்புரம் என்னுமிடத்தில் மரத்தில் இசக்கி உறைவதாக நம்புகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அந்த மரத்தை ஒரு காலத்தில் ராஜாவின் வீரர்கள் வெட்டினார்கள். மரத்திலிருந்து ரத்தம் வடிந்தது.
இதைக்கேள்விப்பட்ட வெள்ளைக்கார துரை துப்பாக்கி ஏந்திய வீரர்களை அங்கு அனுப்பினான். அவர்கள் வெட்ட முயற்சித்த போது மரத்திலிருந்து இசக்கியம்மன் எழுந்து வெட்டியவன் கழுத்தை பிடித்தாள். அன்றுமுதல் ‘வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன்’ ஆனாள். அந்த மரத்துடன் இணைந்து நிற்கும் அம்மன் கோயிலில் சுதைச் சிற்பமாக இந்த நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது.
பொய் சொல்வோரை இந்தக் கோயிலுக்கு சத்தியம் செய்ய அழைத்துப் போவார்கள். கோயில் குளத்தில் குளித்து முடித்து ஈர ஆடையுடன் சென்று நுழைவாயிலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கை மூன்று முறை அணைத்து சத்தியம் செய்ய வேண்டும்.
இம்மாவட்டத்திலுள்ள உதயகிரி கோட்டையையொட்டி வளர்ந்துள்ள ஆலமரத்தடியில் சில சூலங்கள் நடப்பட்டுள்ளன. அதை கோட்டையடி இசக்கி என்கின்றனர். சிலர் மார்த்தாண்டவர்மாவை எதிர்த்துப் போரிட்ட பப்புத்தம்பி ராமன்தம்பி ஆகியோரின் தங்கை உம்மிணித் தங்கச்சி என்கின்றனர். அண்ணண்மாரை இழந்தபின்பு நாக்கைப் பிடுங்கி இறந்த அவளே இங்கே தெய்வமாக உள்ளாள் என்பது அவர்கள் வாதம்.
.












