தமிழ்நாடு அரசின் சமீபத்திய கல்வி சார் நடவடிக்கைகள் நீட்டை நோக்கி மாநிலத்தை நெருக்குகிறது. சிபிஎஸ்சி தனது தேர்வை தவிர்த்துவிட்டதால், அதைப்பார்த்து தமிழ்நாடு அரசும் பிளஸ் டூ தேர்வை தவிர்த்துள்ளது. இது மிகப்பெரும் அபாயம் ஆகும். ஏனெனில், சிபிஎஸ்சி பள்ளித்தேர்வை தவிர்த்தாலும், நீட் தேர்வை சந்திக்கும். குறிப்பாக, பள்ளித்தேர்வு நடத்தாததால் நீட் தேர்வு அவசியம் என்ற நிலைப்பாட்டை முன்னெடுக்கும்.
தமிழ்நாட்டில் நீட்டை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அதில் உறுதிபட இருப்பதாக அடுத்து வந்த அவரது சொற்கள் மூலம் தெரியவில்லை. ஏனெனில், ஒன்றிய அரசு நீட் தேர்வில் நெருக்கடி கொடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏற்கனவே உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டயம் நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு சென்றால் நம் நிலை பரிதாபமாகிவிடும். நீட் தேர்வு இலை என்று அலட்சியமாக இருக்கும் மாணவர்கள், அதை சந்திக்கவேண்டிய கட்டாயத்தின் கடைசி நேர மன நெருக்கடிக்கு தள்ளப்படுவர்.

ஏனெனில், காலாண்டு, அரையாண்டு தேர்வு கூட நடத்தப்படாத நிலையில், 9ஆம் வகுப்பு முதலான மதிப்பெண்களை கணக்கிடுவதா, 10ஆம் வகுப்பு முதல் கணக்கிடுவதா, எதன் அடிப்படையில் மதிப்பெண்ணை கணக்கிடுவது என்று கல்விக்குழுவே திகைத்துள்ளது. அப்படியே எதன் அடிப்படையிலாவது மதிப்பெண் போட்டாலும், அதை நீதிமன்றத்துக்கு சென்று கேள்வி கேட்க நுழைவுத்தேர்வுக்கு ஆதரவான மேல் தட்டு கூட்டம் தயாராக இருக்கிறது. நீதிமன்றம் தனது முந்தைய முடிவில் உறுதியாக இருந்தால் தமிழ்நாடு அரசு எப்படி எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறி,
ஏனெனில், தனி மொழி, கலாச்சாரம், சமய நம்பிக்கை, பண்பாட்டை கொண்ட மாநிலங்களுக்கு ஒரே சட்டம், ஒரே விதிமுறை, இப்போது ஒரே கல்வி, ஒரே போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வு என்று கொண்டுவந்து அதில் ஓரளவு ஒன்றிய அரசு வெற்றியும் பெற்றுவிட்டது. தமிழ்நாடு மட்டுமே நீட் விவகாரத்தில் மிகவும் எதிர்நிலையில் உள்ளது, அதை ஒன்றிய அரசோ, நீதிமன்றமோ இதுவரை பெரும் பொருட்டாக கருதியதாக தெரியவில்லை.
இப்போது கூட சற்று கால அவகாசம் கொடுத்து பிளஸ் டூ தேர்வு நடத்தலாம். பள்ளிகள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. ஒருசில இடங்களில் மட்டும் கொரோனா மையங்கள் உள்ளன. மற்ற இடங்களில் தேர்வு மையங்களை அதிகப்படுத்தி தேர்வு நடத்தினால், நீட்டிலிருந்து தப்பிக்க முதல் கட்ட வாய்ப்பு உருவாகும்.

ஏற்கனவே, கடந்த பல மாதங்களாக அரசு சார்பிலான நீட் பயிற்சி மையங்கள் செயல்படாத நிலையில் நம் மாணவர்களை நிராயுதபாணியாக நீட் களத்தில் இறக்கிவிடக்கூடாது. முந்தைய அரசும் ஒருமுறை இப்படி நீட் குறித்து நிசாரமாக அறிவித்து தேர்வுக்குழிக்குள் மாணவர்களை தள்ளிவிட்டது. ஒருபுறம் கல்வி நிபுணர்களை கலந்தாலோசித்தாலும், மறுபுறம் சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசித்தால் நல்லது.
தெளிவாக சிந்தித்து திட்டவட்டமாக முடிவெடுக்காமல் இளங்குருத்துகளை வாடும் நிலைக்கு தள்ளவேண்டாம் என்பதே சமூக அக்கறையுள்ளவர்களின் வேண்டுகோள்.