ஐயனார்

0
3505

ஐ என்றாலே தலைவர் என்று பொருள். தென்மாவட்ட மக்களில் சில பிரிவினர் குடும்பத் தலைவர், குலத் தலைவர்களை ஐயா, ஐயன் என்று இன்றும் அழைக்கின்றனர். வீடு தேடி வருபவர்கள் ‘உங்கள் ஐயனை எங்கே?’ என்றுதான் பிள்ளைகளிடம் வினவுவார்கள். அவர்களும், ‘ எங்க ஐயா வெளியே போயிருக்காங்க’ என்றே விடை சொல்வார்கள்.
தென்னகத்தில் ஐயனாரும் குலங்களின், குடும்பங்களின் தெய்வமாகவே வணங்கப்படுகிறார். அவரவர் குடும்பத்துக்கும் குலத்துக்கும் ஐயனார் ஒருவர் உண்டு. சில ஐயனார்கள் பல்வேறு பிரிவினருக்கும் பொதுவானவர்களாக இருப்பர். அவர்கள் பல பிரிவினரும் சேர்ந்து வாழ்ந்த ஊர்களின் தலைவராக இருந்திருப்பர்.
மொத்தத்தில் ஐயனார் கிராமத்தைக் காக்கும் பொதுத் தெய்வம். கண்மாய்க் கரைகளில், கானகங்களில் வெள்ளைக் குதிரை, வேட்டை நாய், வீரர்கள் புடைசூழ வீற்றிருக்கும் வீரத் தெய்வம்.
ஐயனாருக்கு உகந்த நாள் பங்குனி உத்திரம். உத்திர விழா இறந்த முன்னோருக்கே கொண்டாடப் படுவதாகும். பாண்டியனின் படைக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் படைவீட்டிலோ படுகளத்திலோ இறந்தால் அங்கேயே சமாதி எழுப்பி அஞ்சலி செலுத்தினர். அந்த வீரர்களே அய்யனார். அவர்களுக்கான விழாதான் பங்குனி உத்திர விழா என்பார்கள்.
கரையடி காத்த ஐயனார், அடைக்கலம் காத்த அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துடைய அய்யனார், இளம்பாளை அய்யனார், கற்குவேல் அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், கூடமுடைய அய்யனார், சிறை மீட்டிய அய்யனார், எட்டிமுத்து அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுடைய அய்யனார், மருது அய்யனார், வேம்பூலி அய்யனார்
நிறைகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார் , தந்தலை வெட்டி அய்யனார் , கருமலை காத்த அய்யனார் , அல்லல் தீர்த்த அய்யனார், செல்லப் பிள்ளை அய்யனார், வீர பயங்கர அய்யனார் , மாணிக்கக் கூத்த அய்யனார், வணங்காமுடி அய்யனார்
குன்னிமலை அய்யனார், தூத்துவான் அய்யனார், மாநாடு அய்யனார், தலையூனி அய்யனார், பொன்வண்டு அய்யனார், பலவேசம் அய்யனார், மருதமலை அய்யனார், அல்லியூத்து அய்யனார், வன்னிய அய்யனார், எரிச்சீஸ்வர அய்யனார்
வில்லாயுதம் உடைய அய்யனார், கோச்சடை அய்யனார், மக்கமடை அய்யனார் , வீரப்ப அய்யனார், குரும்புடைய அய்யனார், நீதியுடைய அய்யனார், செவிட்டு அய்யனார்தேன்மலையாண்டி அய்யனார், கலியுகமெய் அய்யனார், கரந்தமலை அய்யனார், பனையூருடைய அய்யனார், அதிராம்சேரி அய்யனார், மலம்பட்டி அய்யனார், ஜடாமுனி அய்யனார், பொய் சொல்லா மெய்யன்,
பாலாறுகொண்ட அய்யனார், குன்னக்குடி அய்யனார், வலையங்குளம் அய்யனார், வெள்ளிமலை அய்யனார், கருக்காச்சி அய்யனார், பெரியகுளம் அய்யனார், கடவுகாத்த அய்யனார், வல்லகுடி அய்யனார், சுண்டைக்காட்டு அய்யனார், அம்மச்சி அய்யனார், உத்தம அய்யனார், வெள்ளை வீர அய்யனார், வேலங்கி அய்யனார், வெற்றிவேல் அய்யனார் ஐந்தருவி அய்யனார், அழகிய அய்யனார், செம்புலி அய்யனார், அகலிகை சாபம்தீர்த்த அய்யனார், படியேறும் அய்யானர், ஆனைமேல் அய்யனார், வெங்கலமுடி அய்யனார், வட்டத்தாழி அய்யனார், நடுவுடைய அய்யனார்,
வெள்ளுடைய அய்யனார், வீரமலைஅய்யனார், சோலைமலை அய்யனார், குருவீரப்ப அய்யனார், மஞ்சமலை அய்யனார், அழகியவரத அய்யனார், கலியுகவரத அய்யனார், தண்டீஸ்வர அய்யனார், கரும்பாயிரம் கொண்ட அய்யனார், நலலமுத்துஅய்யனார், சிறைகாத்த அய்யனார், மழைகாத்த அய்யனார், திருமேனி அய்யனார், மெய்சொல்லி அய்யனார், கலிதீர்த்த அய்யனார், பெருவேம்பு அய்யனார், மோக்கமுடைய அய்யனார், மெய்ஞானமூர்த்தி அய்யனார், ஓலைகொண்ட அய்யனார், செல்லக்குட்டி அய்யனார், ஆலமுத்து அய்யனார்
சாம்பக மூர்த்தி அய்யனார், வல்லாளகண்ட அய்யனார், குழந்தி அய்யனார், கூரிச்சாத்த அய்யனார், திருவீதிகொண்ட அய்யனார், சிங்கமுடைய அய்யனார், பொய்யாழி அய்யனார், பிழைபொறுத்த அய்யனார், வினைதீர்த்த அய்யனார், வலதுடைய அய்யனார், முடிபெருத்த அய்யனார், பெருங்காரையடி மீண்ட அய்யனார்
பாதாள அய்யனார், வழிகாத்த அய்யனார், கருத்தக்காட்டு அய்யனார், சுந்தரசோழ அய்யனார், திருவரசமுர்த்தி அய்யனார், தொண்டமண்டலஅய்யனார், தடி கொண்ட அய்யனார், காரிய அய்யனார், வெள்ளந்தாங்கி அய்யனார், ஏரமுடி ஐயனார், செங்கொழுந்து ஐயனார் என சுமார் ஐநூறு அய்யனார்கள் உள்ளனர்.
ஐயனாரையே சாஸ்தா என்றும் கொண்டாடுகின்றனர். சமஸ்கிருதத்தில் சாஸ்தா என்றால் தலைவர் தான். பெருவேம்புடையார் சாஸ்தா, ஆதிமணிகண்ட சாஸ்தா, அரிகரபுத்திர சாஸ்தா, குளக்கரை சாஸ்தா, மடையுடையார் சாஸ்தா, வேம்படி சாஸ்தா, தர்ம சாஸ்தா, சௌந்தர்ய சாஸ்தா, மருங்கய்யன் சாஸ்தா, மேகமுடையார் சாஸ்தா, மருது உடையார் சாஸ்தா, சடையுடையார் சாஸ்தா, பூனுடையார் சாஸ்தா, வடமலை சாஸ்தா, பனையடியான் சாஸ்தா, ஹரிஹரபுத்திர சாஸ்தா, பட்டமுடையார் சாஸ்தா,
தெற்கு உகந்த உடையார் சாஸ்தா, குளத்தூராயன் சாஸ்தா, தலைக்காவுடையாயார் சாஸ்தா, காரி சாஸ்தா, கரவுடையார் சாஸ்தா, காரியமுடையார் சாஸ்தா, உலகுடையார் சாஸ்தா, அஞ்சனமெழுதிய கண்டன் சாஸ்தா, பிராஞ்சேரி கண்டன் சாஸ்தா, புன்னார்குளம் சாஸ்தா, புதுக்குளம் கண்டன் சாஸ்தா, நயினார் உதய கண்டன் சாஸ்தா, பொன்னாயிரமுடைய கண்டன்சாஸ்தா, சடையுடைய கண்டன் சாஸ்தா, கான சாஸ்தா, குடமாடிசாஸ்தா, சுரைக்காவல் அய்யன் சாஸ்தா என சாஸ்தாக்களும் இருநூறுக்குமேல் சாஸ்வதமாக அருளாட்சி செய்கின்றனர்.
இவ்வாறான ஐயனார்கள், சாஸ்தாக்களின் பெயரை கேட்டாலே குலம் காக்கவும், ஊரை உயர்த்தவும், நியாயம், நேர்மையை பேணவும், நீர்நிலை, இயற்கையை பாதுகாக்கவும் போராடியவர்கள் என்பது புரிந்துவிடும். குடும்ப, குல, ஊர்த் தலைவர்கள் என்பது சொல்லாமலே பொருள்படும்.
அக்காலத்தில் காடுகளை கடந்து வெளியூருக்கு செல்லும் சாத்துக் கூட்டங்கள் (வணிகர் குழுக்கள்) உண்டு. கள்வர் தாக்கி பொருளை களவாடிச் செல்லாமல் தடுக்க அவர்களுடன் சிறு காவல் படையும் வைத்திருப்பர். அந்த சாத்துக்களின் காவல் தெய்வம் சாத்தன். சாத்தனே சாஸ்தா அதாவது ஐயனார் என்பாரும் உண்டு. காவல் வீரர்களில் மடிந்தவரையும் சாத்தனாக்கியிருக்கலாம். அவர்கள் குதிரைகளில் பயணம் சென்றிருபப்ர் என்பதால் ஐயனாருக்கு குதிரை பிரதானமான வாகனமாயிற்று.
சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி கைலாயம் சென்றார்களாம். அங்கு சேரமான் இறைவனை கண்டு மகிழ்ந்து பாடிய பாடல்களை பூவுலகில் வெளியிடுமாறு சாஸ்தாவிடம் கொடுத்து வெள்ளை குதிரையில் ஏற்றி பூமிக்கு இறைவன் அனுப்பினாராம். சாஸ்தா வெளியிட்ட அந்த நூல் தான் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருக்கயிலாய ஞான உலா. இது சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கூறும் கதை.
ஒருகாலத்தில் திருப்பிடவூர் எனப்பட்ட திருப்பட்டூரில் தன ஆவ்ர் இறங்கினாராம். அங்கு இப்போதும் பெரியய்யா கோயில், எழுத்தச்சன் கோயில் என்றெல்லாம் அழைக்கப்படும் அரங்கேற்றிய ஐயன் கோயில் உள்ளது. ஐயனார் கையில் ஏட்டுச் சுவடியும் உள்ளது.

அதே சமயம் சாஸ்தா வழிபாடு பௌத்த மற்றும் சமண சமயத்திலிருந்து வந்தவை என்ற கருத்தும் உள்ளது. ஐயப்பனான சாஸ்தாவுக்குரிய யோக ரூபமும், சரண கோஷமும், புலனடக்க விரதங்களும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கால்களை மடித்து யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கும் ஐயப்பன் மற்றும் கையில் செண்டு ஏந்திய ஐயனார் திருவடிவங்கள் அவலோகிதேஸ்வரர், பத்மபாணி போன்ற பௌத்த கடவுளரின் திருவுருவங்களை ஒத்துள்ளன.
ஆனாலும், எந்த ஒரு இனத்தாரும் இயல்பில் தங்களில் இருந்து உருவான தெய்வ பிறவிகளையே அக்காலத்தில் பிரபலமாயிருக்கும் வேறு மத தெய்வ சாயல்களில் வடிவமைப்பார்கள். பல்வேறு வீரர்களான ஐயனார்களை ஒத்ததொரு வடிவுக்குள் கொண்டுவரும்போது அப்போது மக்களிடம் அதிக ஆதிக்கம் செலுத்திய சமண, பவுத்த பாணியில் கொண்டுவந்திருக்கலாம் என நம்ப இடமிருக்கிறது.
பிற்காலத்தில் ஐயனாரை சிவமைந்தனாகவும் சிவபூத கணங்களின் தலைவராகவும் தேவாரத்தில் அப்பர் சித்தரிக்கிறார். கந்த புராணத்தில் (14ஆம் நூற்றாண்டு) திருமால், சிவன் இருவருக்கும் மகனாக, அரிஹர புத்திரனாக ஐயனார் அமைகிறார். இதெல்லாம் சித்தாந்த வளர்ச்சியில் அரியும் சிவனும் ஒண்ணு கதைக்கு உருவேற்றம் கொடுக்க உருவாக்கப்பட்டவை.
ஆனாலும், ஐயனாரின் பணியான அல்லும் பகலும் உலகை காக்கும் பணியை கந்த புராணம் மாற்றவில்லை.
அங்கண் மேவி அரிகர புத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்குமாகி இருந்து எவ்வுலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பனால்
என்றே அதில் வருகிறது.


தேவலோகத்திலும் சாஸ்தாவுக்கு காவல் பணி தான். அவரது தளகர்த்தர்களை முக்கிய தெய்வங்களுக்க் உகாவல் வைப்பார். அவரது தளபதியான வீரமாகாள தேவரை இந்திராணிக்குக் காவலுக்கு அமர்த்தியது கந்தபுராணம் மூஉலம் தெரியவருகிறது.
தமிழகத்தைப் போலவே கேரளத்திலும் சாஸ்தா கோயில்கள் உள்ளன. அவற்றுக்காக தாந்திரீக பூஜை முறைகளையும் தீயாட்டு சடங்குகளையும் கவனித்தால் சாஸ்தா வழிபாடு பாண்டி, மலையாள தேசங்களாகிய பாண்யிய, சேர நாடுகளை உள்ளடக்கி நெடுங்காலமாக நிலவி வருவது தெரிகிறது.
தலைவர்களை வழிபடும்போது, அவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்த, அனைவரையும் ஒருவராக்கி, பெருந்தெய்வத்தின் பிரதிநிதியாக்கி, ஒரே வகையான புராணக்கதைகள் புனைவது வழக்கம். அவ்வாறே ஐயனார் அனைவருக்கும் பூர்ண, புஷ்கலை (பூரணி, பொற்கலை) தேவியரை துணைவியராக்கி இடம், வலமாக அமர்த்தினர்.
தொடக்கத்தில் அவர்களால் பாதுகாக்கப்பட்ட ஊர்கள், காடுகள், நீர் நிலைகளின் அருகே கோயிலின்றி மண்சிலையாக வடிக்கப்பட்டபோது குதிரை மீதமர்ந்த வீரத்தலைவர்களாகவே ஐயனார்கள் காட்சியளித்தனர். அவர்களுடன் காவல் வீரர்களும் நாய்களுமே சிலைகளாக காட்சி தந்தன.


பெருவாரியானவர்களின் வழிபாடு என்பதால் இதை ஆகம சமயத்தவர் உட்கவர்ந்தனர். பிற்காலத்தில் இவர்களுக்கு கோயில் கட்டி, புராணங்கள் புனைந்து, சிலாரூபமாக இரு தேவியருடன் மணக்கோலத்தில் சாந்தமாக அமர்த்தினர்.
பெரும்பாலும் நமது சுவாமி அம்பாள் புராணங்களில் வேறுபட்ட சில சமூகங்களின் இணைப்பை பற்றிய குறிப்பு இருக்கும். இன்றும் குமரிமுனை மீனவர்களுக்கு கன்யாகுமரி மகள் தான். திருச்செந்தூர் முருகன், அருகில் இருக்கும் வீரபாண்டியன்பட்டின பரதவர்களுக்கு மச்சான் சாமி தான். அவர்களை பொருத்தவரை வள்ளி மீனவ குலப்பெண் என்பது ஐதீகம்.

அவ்வாறே, தமிழக கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவு ஐயன் (ஐயப்பன்) கோயிலில் ஐயனாருக்கும் புஷ்கலைக்கும் மதுரை சௌராஷ்டிர சமூகத்தினரே திருக்கல்யாணம் நடத்திவைக்கின்றனர். அவர்கள் புஷ்கலா தேவி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்று கர்ணபரம்பரை கதை சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here