திட்டமாய் முற்பிறப்பில் செய்த
வினைக்காக வந்து நின்ற
கட்டுடன் – பழகைக் காட்டில்
களிப்புடன் – அங்கே வந்த
செட்டியை மாய்த்த நீலி
சிறப்புடன் உதித்த கதை”
என்று இசக்கி கதையை வில்லுப்பாட்டாளிகள் தொடங்குகின்றனர்.
தாசிக் குலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கொன்ற அந்தணன் செட்டியாக மறுபிறப்பெடுக்கிறான். நீலியாக உருவெடுத்த தாசிமகள் குழந்தையுடன் வழிமறித்து அவனை சாகடிக்கிறாள். இதுவே இசக்கி கதையின் சுருக்கம்.
நீலிக் கதை போன்றதே இசக்கியம்மன் கதையும். அது நிகழ்ந்த இடமும் பழயனூர் அல்லது பழவூர் தான். அந்த பழவூரும் இசக்கியின் மூல ஸ்தலமாக கருதப்படும் முப்பந்தல் அருகே இருப்பதும், முப்பந்தல் அருகே ஒரு வேளாளக் குடியிருப்பு சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அழிந்ததாக இன்றும் அப்பகுதியினர் சொல்லிவருவதும் இசக்கியின் கதைக்கு நிஜத்தன்மை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரிக்குள் நுழைகிற இடத்திலுள்ள சிறிய கிராமம் தான் முப்பந்தல். முற்காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் சந்தித்துப் பேசிய இடமென்பார்கள். அந்த சந்திப்புக்கு முன்னிலை வகித்தவர் ஒளவையார் என்பதால் அவருக்கொரு கோயில் அங்கு இன்னமும் இருக்கிறது. மூவேந்தர்கள் ஒரு பந்தலின்கீழ் அமர்ந்து சமாதானம் பேசியதால் அது முப்பந்தலாயிற்றாம்.
அங்கு இசக்கியம்மன் கோயில் எழுப்பப்பட்டதற்கும் ஒரு கதை சொல்கிறர்கள். பக்கத்து ஊரான பணகுடியின் பண்ணையார் அருணாசலத்தின் மனைவிக்கு தீராத வயிற்றுவலி. வைத்தியத்துக்கு கட்டுப்படாமல் வலி அதிகரித்துக்கொண்டே போனது. அப்போது பண்ணையார் பேத்தியின் கனவில் இசக்கியம்மன் தோன்றி, ‘முப்பந்தல் மரத்தடியில் இருக்கிறேன். எனக்கு தங்க இடம் தந்தால் பாட்டியின் வயிற்றுவலி நீங்கும்’ என்று பேசினாள்.
பண்ணையார் ஊர் பெரியவர்களைக் கூட்டிக் கொண்டு முப்பந்தலுக்குப் போய் பார்த்தபோது
ஒரு குழிவான கல்லில் வெற்றிலை இடித்த கறை இருந்தது. அந்தக் கல்லையே சிலையாக்கி சிறிய கோயிலமைத்தார். அவர் மனைவியின் வயிற்று வலி தீர்ந்ததும், பேத்தியின் தலைப் பிரசவத்துக்கு நேர்ந்து தொட்டில் கட்டினார். பெண்குழந்தை பிறந்ததும் புது முறத்திலே கண்ணாடி, வளையல், சாந்து, கண் மை வைத்து படைத்தார்.
இசக்கியின் கதையும் நீலியின் கதையும் ஒர்ப்போலவே இருக்கிறது. மூலக் கதையை படித்தால் நீலி தான் இசக்கி என்பது நிதர்சனமாகிறது.
ஏனெனில், இதுவும் பழமையான சிவன் கோயில் இருந்த ஊராகவே பழயனூரை குறிப்பிடுகிறது. அவ்வாறென்றால் அது பழகைநல்லூர்தான் என்பது ஆய்ந்தறியாமலே அப்பட்டமாக தெரிந்துவிடுகிறது. பழகை நல்லூர் சிவன் கோயிலில் பரமனுக்கு பணிவிடை புரிந்த 61 பட்டர்களில் ஒருவரான சிவசாமியின் மகன் வேலவன். இவன் அவ்வூரில் இருந்த 41 தாசிகளில் ஒருத்தியான சிவகாமியின் மகள் லட்சுமி ஆருத்ரா தரிசனத்தின்போது ஆடிய ஆட்டத்தால் அசந்துபோய் அவளை காதலிக்கிறான். இதையறிந்த தாசி சிவகாமி அவனுக்கு உணவில் வசிய மருந்தை கலந்து கொடுத்து வீட்டோடு மயக்கிப் போடுகிறாள்.
வீடு, வாசல், பொன், பொருளையெல்லாம் விற்றுச் செலவழித்த வேலவன், கோயில் நகைகளையும் கொள்ளையடித்து இசக்கியின் கொள்ளையழகுக்கு காணிக்கையாக்குகிறான். வெறுங்கையனானதும் அவனை வீட்டை விட்டு துரத்துகிறாள் தாசி சிவகாமி. வெளியேற்றப்பட்ட வேலவன் வெறியேறப் பெற்றவனாக வனாந்தரத்தில் சஞ்சரிக்கின்றான். தாயைப் போலன்றி, உண்மைக் காதலுக்கு உயிரையும் கொடுக்க தயங்காத லட்சுமி வேலவனை தேடி காட்டுக்குள் செல்கிறாள்.
நடுக்காட்டில் காதலனை கண்டு சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைக்கிறாள். அவன் மறுக்கிறான். கோயில் நகை திருடிய தன்னை மன்னன் தண்டிப்பான் என்ற அச்சமும், அனைத்துக்கும் இவள் தானே காரணம் என்ற ஆத்திரமும் அவனை வஞ்சம் கொள்ளச் செய்கிறது.
இருவரும் ஒரு பெரிய கள்ளி மரத்தடியில் ஓய்வெடுக்கிறார்கள். லட்சுமி அயர்ந்து தூங்கியதும் மடியில் வைத்திருந்த அவள் தலையை அருகில் மண்கூட்டி வைத்துவிட்டு, சத்தமின்றி நடந்துசென்று அருகில் உள்ள பாறாங்கல்லை எடுத்து அவள் தலையில் போட்டுக் கொல்கிறான் வேலவன். ஆனால், வினை விதைத்த அவன் வினையை அறுக்கிறான். தாகம் தணிக்க காட்டுக் கிணற்றுக்கு சென்றபோது கிணற்றடிக் கல்லின்கீழ் இருந்த நாகம் தீண்டி நஞ்சூறி சாகிறான். லட்சுமியின் அன்பு சகோதரனான நட்டுவன் நீலகண்டன் வீட்டில் தங்கையை காணாமல் காட்டுக்கு தேடி வருகிறான். அங்கு அவள் இறந்துகிடந்த கோலத்தை கண்டு தூக்கிட்டு மடிகிறான்.
ஈசன் நிழலையடையும் லட்சுமி காதலித்து துரோகம் செய்த வேதியனை பழிவாங்க மற்றொரு பிறவி வேண்டிப் பெறுகிறாள். அவ்வாறே அவளும் அண்ணனும் நீலன், நீலி என சோழ ராசருக்குக்
குழந்தைகளாகப் பிறந்தனர். இக்குழந்தைகளுக்கு பசியாற தாய்ப்பால் போதுமானதாக இல்லை..
எனவே, ஊர் உறங்கியதும் இருவரும் தொட்டிலை விட்டிறங்கி வெளியே சென்று ஆடுகளையும்,
மாடுகளையும் கடித்து ரத்தம் குடித்துப் பசியாற்றிக்கொண்டு திரும்ப வந்து
படுத்துக் கொண்டனர்.