கோவை சாய்பாபா கோவில் கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா மகள் ஆயிஷா பேகம் என்ற நிஷா (24 ).இவருக்கும் சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்ட பொழுது சிவகுமார் ஆயிஷா பேகம் கழுத்தில் தாலியை கட்டியுள்ளார். மறுநாள் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கு இருவரும் ஜோடியாக சென்றனர். அப்போது சிவகுமார் யாருக்கும் தெரியாமல் நடைபெற்ற திருமணம் ஊரறிய நடக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு தாலியை கழற்றி கோவில் மரத்தில் மாட்டிவிடுமாறு கூறியிருக்கிறார். இதை ஏற்று சிவக்குமார் கட்டிய தாலியை கழற்றி ஆயிஷா பேகம் மரத்தில் மாட்டி விட்டார்.
இதன் பின்னர் சிவகுமார் தனது மூத்த சகோதரரின் திருமணம் முடிந்த பிறகு நாம் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இதை நம்பி ஆயிஷா பேகம் காத்திருந்தார். ஆனால், சிவக்குமார் திருமணம் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று மதியம் ஆயிஷா பேகம் சிவகுமாரை கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் உள்ள கடலைக்கார சந்து பகுதியில் சந்தித்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு சிவக்குமார் மறுத்ததோடு ஆயிசா பேகத்தை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஆயிஷா பேகம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.