தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த வசந்தன் (32). அறிவியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து பட்டம் பெற்றவர். ஜப்பானில் வேலை பார்த்து வருகிறார்.
டோக்கியோவை சேர்ந்த மெகுமி (28). ஒரு தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். வசந்தன், மெகுமி ஆகிய 2 பேரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி உள்ளனர்.
வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் கல்வி, ஆராய்ச்சிகள், பெற்றோர் மீது தனக்கு உள்ள பாசம், தமிழ் பண்பாடு-கலாசாரம் உள்ளிட்டவை குறித்த விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தார். இந்த விவரங்களை பார்வையிட்ட மெகுமிக்கு தமிழ் கலாசாரம் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
இந்த தமிழ் கலாசாரமே வசந்தன் மீது காதலாக மாற வழி செய்ய மெகுமி, தனது காதலை வசந்தனிடம் வெளிப்படுத்தினார். இது பற்றி வசந்தன், தனது தந்தையுடன் ஆலோசிக்க மகனின் காதலை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட ஜெயக்குமார் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்.
மெகுமியின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்க வசந்தன்-மெகுமி திருமணம் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாசாரப்படிநடைபெற்றது.
திருமணத்தில் விழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மெகுமியின் உறவினர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்தபடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தின் ஒவ்வொரு சடங்கையும் ஜப்பான் நாட்டினர் கை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.













