வி.பி.துரைசாமி நீக்கமும் திமுக சாதி அரசியலும்

0
1375


திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி.துரைசாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது சாதிக்காரரான பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்த நிலையில் வி.பி.துரைசாமி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல், ‘திமுக உள்பட எல்லா கட்சிகளும் ஜாதி அரசியல் செய்கிறார்கள். நானும் பாஜக தலைவர் முருகனும் செய்தால் என்ன? இந்தியாவில் மிகப்பெரிய கட்சியான பாஜக, மாநிலத் தலைவராக ஒரு அருந்ததியரை நியமித்திருக்கிறது. ஜாதி எங்கே என்று கேட்கும் கட்சிகள் இப்படி பதவிகளை தருவார்களா?’ என்று வி.பி. துரைசாமி கேட்டுள்ளார்.
ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் துரைசாமி முடிவெடுத்ததாக கூறப்பட்டாலும், அவரது
இந்த கேள்வியை திமுகவினர் பலரால் மறுக்கமுடியவில்லை. ஆர்.எஸ். பாரதிக்கு அளித்த மரியாதையை கூட தனக்கு அளிக்கவில்லை என்று அவர் புலம்புவதில் இருந்து திமுக தலைவர்களின் பார்வையில் சாதிய கண்ணோட்டம் இருந்ததை அறிய முடிகிறது.

அண்ணா காலத்துக்கு பின் திமுக சாதிய அடிப்படையில் அரசியல் நடத்தியதை கண்கூடாக காணமுடிந்தது. ‘ஒவ்வொரு தலைவர் பிறந்த நாளின்போதும் அந்தந்த சாதியை சேர்ந்தவர்களை சிறப்பு விருந்தினராக அனுப்புவது திமுகவினர் வழக்கம். சாதியினர் எண்ணிக்கைக்கேற்ப தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவார்கள். சாதியினரை கவரும் வகையில் அறிக்கைகள் விடுவர். கனிமொழி, டி.ஆர். பாலு, கே.எம்.நேரு போன்றோர் அந்தந்த சாதியின் முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் உள்ளனர்.

அதேவேளை, வி.பி.துரைசாமி போன்றோர் திமுகவில் இருந்த நிலையிலும் சாதிய சிந்தனையுடனேயே இயங்கியுள்ளனர். அவ்வாறின்றி, இப்படி திடீர் முடிவு எடுத்திருக்க தேவையில்லை. பாஜகவுக்கு போனாலும் சில்லறை சலுகைகளை தவிர வேறொன்றும் அவருக்கு கிடைத்துவிடப்போவதில்லை.

திமுகவிலிருந்து ‘உருவல்’ வேலையை தொடங்க பாஜகவுக்கும் இப்போது அவசியமில்லை.
கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல மாதங்களாகியும் தமிழிசை போல் பரபரப்பு பேட்டியளித்தோ, விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் நடத்தியோ பெயரை நிலை நிறுத்த முடியாததால் இப்படி அகப்படுபவரை இணைத்து தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முருகன் முயற்சி மேற்கொண்டுள்ளதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

வி.பி.துரைசாமி போனதால் திமுகவுக்கு பெரிய அளவு இழப்பில்லை என்றாலும், அது தனது அரசியல் நடைமுறையை திருத்திக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது. சமூக சீர்திருத்த இயக்கமாக தொடங்கப்பட்ட திமுக, தனது போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணரவேண்டும்.

இனியாவது திமுக சாதிய நோக்கில் அரசியல் நடத்தாமல் பெரியாரிய கோட்பாட்டை செயல்முறையில் கடைப்பிடித்தால் கட்சி வலிமையாக இருக்கும். இல்லையேல், இன்னும் பல முன்னணி தலைவர்கள் கூடாரத்தை காலி செய்ய நேரிடும்’ என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here